‘15 நாட்களில் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான ரசீது’.. முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான ரசீது 15 நாட்களுக்குள் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சட்டசபையில் 110-விதியின் கீழ் கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற 16.43 லட்சம் விவசாயிகளின் கடன் நிலுவைத் தொகையான ரூ.12,110 கோடி தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பை முதல்வர் பழனிசாமி வெளியிட்டார். இதற்கான அரசாணை நேற்று வெளியிடப்பட்டது. விரைவில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழை முதல்வர் பழனிசாமி வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான ரசீது 15 நாட்களுக்குள் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் கைனூரில் பிரச்சாரம் மேற்கொண்டபோது முதல்வர் பழனிசாமி அறிவித்தார். அதில்,‘வெயில், மழை என்று உழைக்கும் விவசாயிகள் 16 லட்சத்து 43 ஆயிரம் குடும்பங்களுக்கு பால் வார்த்த அரசு அதிமுக அரசு. விவசாய கடன் ரத்துக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இன்னும் 10 முதல் 15 நாட்களில் கடன் தள்ளுபடிக்கான ரசீது வழங்கப்படும். மக்களின் எண்ணங்களை நிறைவேற்றும் அரசு இது. தமிழ்நாடு முழுவதும் 95 சதவிகிதம் முதியோர் ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்துப்பட்டுள்ளது’ என முதல்வர் பழனிசாமி கூறினார்.

மற்ற செய்திகள்
