‘சென்னை வரும் சீன அதிபருக்காக’.. ‘தயாராகும் பிரம்மாண்ட விருந்தில்’.. ‘இடம்பெறும் தமிழர்களின் உணவுகள் என்னென்ன?’..
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Saranya | Oct 10, 2019 07:30 PM
தமிழகத்திற்கு வரும் சீன அதிபருக்கு பாரம்பரிய உணவுகளுடன் சிறப்பு விருந்து அளிக்கப்பட உள்ளது.
இந்தியா - சீனா நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை மேம்படுத்த சீன அதிபர் ஜி ஜின்பிங் , பிரதமர் நரேந்திர மோடி இருவரும் நாளை மாமல்லபுரத்தில் சந்தித்துப் பேச உள்ளனர். நாளை (11-10-2019) மதியம் சென்னை வந்தடையும் அதிபர் ஜி ஜின்பிங் வரவேற்பு நிகழ்ச்சி முடிந்து கார் மூலம் கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர ஹோட்டலில் மதிய உணவு சாப்பிட உள்ளார். அப்போது அவருக்கு சீன உணவுகளுடன் சேர்த்து தென்னிந்திய உணவு வகைகளும் பரிமாறப்பட உள்ளது.
இந்த விருந்தில் அவர் விரும்பி சாப்பிடும் வெங்காயம் மற்றும் இறைச்சியால் தயாரிக்கப்பட்ட சாதம், முட்டைக்கோஸ் - கேரட் கலந்த வறுத்த ஈரல், நூடுல்ஸ், வெஜிடபிள் சாலட், பயறு வகைகள், சூப் வகைகள் ஆகியவை இடம் பெறுகின்றன. அத்துடன் தென்னிந்திய உணவு வகைகளான அரிசி சாதம், சாம்பார், வத்தக் குழப்பு, ரசம், பிரியாணி, பட்டர் நான், சப்பாத்தி, ரொட்டி, புலாவ், தக்காளி, கேரட் சூப் உள்ளிட்ட 28 வகையான உணவு வகைகள் இடம் பெறுகின்றன.
அடுத்த நாள் காலை உணவு பட்டியலில் தமிழர்களின் பாரம்பரிய உணவான இட்லி, தோசை, வடை, சாம்பார், சட்னி, வெண்பொங்கல், பூரி, இடியாப்பம், வடைகறி ஆகியவையும் இடம் பெற உள்ளன. தமிழர்களின் உணவு வகைகளை சீன அதிபருக்கு விளக்கிச் சொல்லி ருசி பார்க்க வைக்க சமையல் கலை வல்லுனர்கள் உடன் நிறுத்தப்பட உள்ளனர்.