'மொதல்ல நைசா பேசுறது'...'ஏடிஎம்'மில் பணம் எடுக்கும் மக்களே 'உஷார்'...'புது ரூட்டில் பணம் அபேஸ்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Jeno | Oct 05, 2019 02:16 PM
ஏடிஎம்மில் பணம் எடுத்து தருவது போன்று பணத்தை நூதன முறையில் திருடிய கொள்ளையனை காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள். பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளார்கள்.
காரைக்குடியைச் சேர்ந்தவர் கோபி. இவர் ஏடிஎம் மையங்களில் நின்று கொண்டு, பணம் எடுக்க வருபவர்களை நோட்டமிடுவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். அவ்வாறு ஏடிஎம் மையத்திற்கு வரும் முதியவர்களிடம் பணத்தை எடுக்க உதவுவதாக பேச்சு கொடுப்பார். அவர்களுக்கும் தனக்கு உதவ வந்துள்ளாரே என எண்ணி ஏடிஎம் கார்டை கோபியிடம் கொடுப்பார்கள். அவர் அதனை பெற்றுக் கொண்டு அதற்கு பதிலாக போலி ஏடிஎம் கார்டை கொடுத்து பணத் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இவர் கடந்த ஆறு மாதங்களாக, திருச்சி, சிவகங்கை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள ஏடிஎம் மையங்களுக்கு வரும் வாடிக்கையாளரிடம் கைவரிசை காட்டியுள்ளார். காவல்துறையிடம் பிடிபடாமல் தப்பி வந்த கோபியை, ராமநாதபுரத்தில் உள்ள ஏடிஎம் ஒன்றில் வைத்து கையும் களவுமாக பிடித்தனர்.
அவரிடமிருந்து 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்த காவல்துறையினர், ஏடிஎம்மில் பணம் எடுக்க வரும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளார்கள்.