திருமண விருந்தில் குறை.. மணமகன் வீட்டார் புகார்.. அடித்துக்கொன்ற கும்பல்!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Sangeetha | Apr 30, 2019 04:45 PM
திருமண விருந்து குறித்து குறை கூறிய நபரை, மணப்பெண்ணின் வீட்டார் அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள கங்ரல் அணை அருகே அழுகிய நிலையில் ஆணின் சடலம் கிடப்பதாக அங்கு சென்ற சுற்றுலாப் பயணிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
உடற்கூராய்வு அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. அதில் 5 நாட்களுக்கு முன்னர் அவர் கொல்லப்பட்டிருப்பதும், தலையில் பலமாக தாக்கப்பட்டு இறந்திருப்பதும் தெரியவந்தது. அதன்பின்னர் விசாரணையை முடுக்கிவிட்ட காவல்துறையினருக்கு, கொலை செய்யப்பட்டது 25 வயதான பிரகாஷ் சாகு என்பது தெரியவந்தது.
சாகு கொலை செய்யப்படுவதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்னர் 3 பேருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அதாவது கடந்த 23-ம் தேதி மணமகன் சார்பில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சாகு சென்றிருந்தார். அங்கு மாப்பிள்ளை வீட்டாருக்கு அளிக்கப்பட்ட விருந்தில் சாப்பாடு குறைவாக பரிமாறப்பட்டதாக, பெண் வீட்டாரிடம் சாகு குறை கூறினார்.
இதனால் ஆத்திரமடைந்த மணப்பெண்ணின் சகோதரனும், அவரது நண்பர்கள் இருவரும் சாகுவிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அங்கிருந்த பெரியவர்கள் இப்பிரச்சனையை தலையிட்டு தீர்த்து வைத்தனர். அதன்பின்னர் அடுத்தநாள் வேறுஒரு நிகழ்ச்சியில் நால்வரும் சந்தித்தனர். அப்போது மீண்டும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து அங்கிருந்து போனில் பேசிக்கொண்டே சாகு, கங்ரல் அணை பக்கம் சென்றார். அவரைப் பின்தொடர்ந்த மணமகளின் சகோதரர் மற்றும் நண்பர்கள், தங்களை மற்றவர்கள் முன் அவமானப்படுத்திய கோபத்துடன் சாகுவின் தலையில் கல்லால் தாக்கினர். இதில் சாகு கீழே விழுந்தார்.
பின்னர் அவரை கொலை செய்து, அவரது உடலை கட்டி அணைக்குள் போட்டனர். கொலை நடந்து 5 நாட்களுக்குப்பிறகே கொலையில் ஈடுபட்ட மணப்பெண்ணின் சகோதரன் ஹிதேஷ் அவரது நண்பர்கள் கோமேஷ் மற்றும் தீபக்கை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.