பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. தோண்டத் தோண்ட எலும்புக்கூடுகள்.. லிஃப்ட் தருவதாகக் கூறி மாணவிகளை கொன்ற நபர்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Apr 30, 2019 05:55 PM

லிஃப்ட் தருவதாகக் கூறி, மாணவிகளை இருசக்கர வாகனத்தில் அழைத்துச்சென்று, பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கி, கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

telangana village rocked by rape murder of 3 girls vandalise

தெலுங்கானாவின் யாதகிரி மாவட்டத்தில் உள்ள ஹாஜிப்பூர் கிராமத்தை சேர்ந்த, 12-ம் வகுப்பு மாணவி ஒருவர் கடந்த நான்கு நாட்களுக்கு முன் மாயமானார். அவரை கண்டுபிடித்து தருமாறு பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்திருந்த நிலையில், சிறுமியின் கைப்பை பாழடைந்த கிணறு ஒன்றின் அருகே கண்டெடுக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, தீயணைப்புப் படையினர் வரவழைக்கப்பட்டு கிணற்றை ஆய்வு செய்தபோது, அதில் மாயமான சிறுமியின் உடல் கிடைத்துள்ளது. சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டது உடற்கூராய்வு முடிவில் தெரியவந்தது. இதையடுத்து கிணற்றின் உரிமையாளர் சீனிவாசனிடம் விசாரணை நடத்தியபோது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

அந்தப் பகுதியில் பேருந்து வசதி இல்லாத‌தால், மாணவிகளை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ள சீனிவாசன், பள்ளி மாணவியை பலாத்காரம் செய்து உடலை மறைக்க கிணற்றினுள் வீசியுள்ளார். இதனைத்தொடர்ந்து சீனிவாசனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மேலும் ஒரு பெண்ணை கொலை செய்து அதே கிணற்றில் புதைத்ததாக கூறியுள்ளதாகத் தெரிகிறது. அதனையடுத்து கிணற்றில் இருந்து ஒரு மாணவியின் எலும்புக்கூடு தோண்டியெடுக்கப்பட்டது.

எலும்புக்கூடாக கிடந்தவர் அதே கிராமத்தைச் சேர்ந்த பி.காம் படித்த பெண் என்பதும், கடந்த மாதம் அவர் காணாமல் போய் இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. காதல் விவகாரம் என நினைத்து கோபத்தில் பெற்றோர் புகார் அளிக்காமல் இருந்ததால், இந்தக் கொடூரம் வெளி உலகிற்கு தெரியாமல் போயுள்ளது.

இதைதொடர்ந்து கிணற்றில் சோதனையிட்டபோது, மேலும் பல எலும்புகூடுகள் கைப்பற்றப்பட்டன. இதேபோல 4 ஆண்டுகளுக்கு முன் 2 இளம்பெண்கள் மாயமான சம்பவத்திலும் சீனிவாசனுக்கு தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவிகளை, லிஃப்ட் தருவதாக கூறி அழைத்துச்சென்று சீனிவாசன் இத்தகைய செயலில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த தகவலை அறிந்து ஆத்திரமடைந்த ஊர் மக்கள் சீனிவாசன் வீட்டை தீயிட்டு கொளுத்தியதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கிணற்றில் மேலும் சடலங்கள் இருக்கிறதா என தேடப்பட்டு வரும் நிலையில், சீனிவாச ரெட்டியின் வீட்டை கிராம மக்கள் ஒன்று சேர்ந்து தீ வைத்து கொளுத்தினர். மேலும், 2015-ம் ஆண்டு அதே ஊரில் 6-ம் வகுப்பு மாணவி ஒருவர் காணாமல் போன நிலையில், அதற்கும் சீனிவாசனுக்கும் தொடர்பு இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

Tags : #SEXUALHARASSMENT #TELANGANA #MURDER #VANDALISE