காசிமேடு மீனவருக்கு அடித்த அதிர்ஷ்டம்.. ரூ.1 கோடி மதிப்பிலான மீன்.. அப்படி என்ன இருக்கிறது தெரியுமா?
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை காசிமேடு மீனவர் வலையில் சுமார் ஒரு கோடி மதிப்புள்ள அரியவகை மீன் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
ஒருவருக்கு அதிர்ஷ்டம் வர வேண்டும் என்று இருந்தால் கூரையை பீய்த்துக்கொண்டாவது வரும் என சொல்வார்கள். அது தற்போது மீனவர் ஒருத்தருக்கு நிகழ்ந்துள்ளது. மீனவர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து மீன் பிடிக்கச் செல்லும்போது பல நேரங்களில் சுமாராகவே மீன்கள் வலையில் சிக்கினாலும், மிக அரிதாக சில நேரங்களில் அரிய வகை மீன்கள் சிக்கும் என்பதை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்த மீனவர் ஒருவர் இன்று மீன்பிடிக்க சென்றிருந்தார். அப்போது அவரது வலையில் சுமார் 2 டன் எடையுள்ள அரிய வகை கூரைக் கத்தாழை மீன்கள் சிக்கின. இந்த மீன்களின் மதிப்பு சுமார் ஒரு கோடி இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த மீன்களை அவர் விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகள் நடக்கிறது. மிகப்பெரிய ஜாக்பாட் அடித்துள்ளதை அடுத்து அந்த பகுதி மக்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து மீனவர்கள் கூறியதாவது, "இந்த கத்தாழை மீன்கள், ஷியானிடே என்ற மீன் வகையை சேர்ந்தவையாகும். இந்த வகை மீன்களுக்கு (ஆண் மீன்கள்) செவில் சுவாசத்தோடு, மீன்களின் அடி வயிற்றில் இருக்கும் நெட்டி என்ற காற்றுப்பை உதவியுடன் கூடுதல் சுவாசத்தை கொண்டிருக்கும். பெண் மீன்களுக்கு சிறிய அளவிலான நெட்டி இருக்கும். இந்த நெட்டி மூலம் ஆபத்து காலத்தில் ஒரு வகை ஒலியை எழுப்பும் தன்மை கொண்டதாகும்.
மேலும் இந்த நெட்டியானது ஐசிங்கிளாஸ் எனும் பளபளக்கும் ஒருவகை வேதிப்பொருட்களை கொண்டதாகவும், அது ஒயின், ஜெல்லி மிட்டாய் மற்றும் மருந்துகள் தயாரிக்கும் மூலப்பொருட்களாக பயன்படுத்தப்படுவதாகவும், அதனால், மீனவர்கள் இதனை சேமித்து தங்கத்தை போல் கிராம் கணக்கில் விற்பனை செய்வார்கள் என்றும் கூறப்படுகிறது. ஒரு மீனில் குறைந்தபட்சம் 100 கிராம் வரை நெட்டி கிடைக்கும் என்று மீனவர்கள் தெரிவித்தனர். இவை வெளிநாடுகளிக்கும், மருத்துவ துறைக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த மீன்கள் கிலோ ரூ.300 முதல் ரூ.350 வரை விற்கப்படுகிறது.