கோதுமை மாவில் அச்சு.. கீழ் வீட்டுக்காரருக்கு ‘ஷாக்’ கொடுத்த சென்னை ஏசி மெக்கானிக்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் போலி சாவி தயாரித்து பக்கத்துவீட்டில் கொள்ளையடித்த ஏசி மெக்கானிக்கை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை
சென்னை அம்பத்தூர் அடுத்த கள்ளிக்குப்பம் முத்தமிழ் நகர் 7-வது தெருவில் உள்ள வீடு ஒன்றின் முதல் தளத்தில் வசித்து வருபவர் பாலாஜி. இவர் கட்டிடம் கட்டும் ஒப்பந்ததாரராக வேலை செய்து வருகிறார். இரண்டாவது தளத்தில் சந்திரசுதன் என்பவர் கடந்த ஒரு ஆண்டாக வசித்து வருகிறார்.
பணம், நகை கொள்ளை
இந்த நிலையில் பாலாஜி தனது மனைவி வாசுகிதேவியுடன் சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள கேளிக்கை விடுதிக்கு சென்றுள்ளார். பின்னர் இரவு வீட்டிற்கு வந்த வாசுகிதேவி, ஆடைகளை எடுக்க பீரோவை திறந்து பார்த்துள்ளார். அப்போது பீரோவில் வைத்திருந்த நகை, பணம் திருடு போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
போலீசார் விசாரணை
உடனே கணவர் பாலாஜியிடம் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அவர் இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.
மேல்வீட்டு இளைஞர் மீது சந்தேகம்
இதனிடையே மேல்வீட்டில் வசிக்கும் நபர் மீது சந்தேகம் உள்ளதாக போலீசாரிடம் பாலாஜி தெரிவித்துள்ளார். இதனை அடுத்து சந்தேகத்தின் பேரில் இரண்டாவது தளத்தில் வசித்துவந்த சந்திரசுதனை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சந்திரசுதன் நகை, பணத்தை திருடியது தெரியவந்துள்ளது.
ஏசி மெக்கானிக்
இதனைத் தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளன. சந்திரசுதன் ஏசி மெக்கானிக்காக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த சுழலில் கீழ் தளத்தில் உள்ள பாலாஜி கடந்த வியாழக்கிழமை பாரிமுனையில் உள்ள கோவிலுக்கு சென்று வந்துள்ளார். வீட்டிற்கு வந்த களைப்பில் மறதியாக வீட்டின் சாவியை கதவிலயே விட்டுவிட்டு தூங்க சென்றுள்ளார்.
கோதுமை மாவில் சாவி அச்சு
இதனைப் பார்த்த சந்திரசுதன் கதவிலிருந்த சாவியை எடுத்து சென்று கோதுமையில் அச்சு எடுத்துள்ளார். பின்னர் தன்னிடம் இருந்த சால்டரிங் ஈயங்களை உருக்கி அச்சு அசலாக போலியாக சாவியை தயாரித்து வைத்துள்ளார். நேற்றிவு யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் கதவை திறந்து பீரோவினை லாவகமாக திறந்து பெட்டியில் வைத்திருந்த தங்க நகைகள் மற்றும் பணத்தை எடுத்துக்கொண்டு மீண்டும் வீட்டை பூட்டிவிட்டு சென்றது விசாரணையில் தெரியவந்தது.
மக்கள் அதிர்ச்சி
இந்த நிலையில் சந்திரசுதன் கொள்ளையடித்த நகைகள் மற்றும் பணத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் சந்திரசுதன் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
