ஆடுனது ஒரே மேட்ச்.. அடிச்சதும் ஒரே ரன் தான்.. ஆனாலும், இவ்ளோ பெரிய தொகையா.. மாஸ்டர் பிளான் போட்ட MUMBAI INDIANS
முகப்பு > செய்திகள் > விளையாட்டு10 அணிகள் பங்கேற்கவுள்ள 15 ஆவது ஐபிஎல் தொடர், மார்ச் மாத இறுதியில் ஆரம்பம் ஆகும் என தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.
இதற்கு முன்பாக, அனைத்து அணிகளும் வீரர்களைத் தேர்வு செய்யும் ஐபிஎல் மெகா ஏலம், கடந்த இரண்டு தினங்கள், பெங்களூரில் வைத்து நடைபெற்றிருந்தது.
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய புதிய அணிகள் களமிறங்கியுள்ள நிலையில், மொத்தம் 10 அணிகள், இந்த முறை ஐபிஎல் தொடரில் பங்கேற்கிறது.
ஐபிஎல் மெகா ஏலம்
புதிய இரண்டு அணிகளும் தலா 3 வீரர்களை தக்க வைத்திருந்த நிலையில், மற்ற 8 அணிகளும், தங்களின் விருப்பத்திற்கேற்ப, 2 முதல் 4 வீரர்களை தக்க வைத்திருந்தது. தொடர்ந்து, கடந்த இரு தினங்கள் நடைபெற்ற ஏலத்தில், மற்ற வீரர்களை அணியில் எடுக்கவும் செய்தனர்.
அதிக தொகை
ஏலத்திற்கு முன்பாக, எப்படிபட்ட வீரர்களை எடுக்கலாம் என்பது பற்றி, பல ஆலோசனைகள் போட்டு, அனைத்து அணிகளும் தயாராகி இருந்தது. அதன் படி, கடந்த இரண்டு தினங்களில், பல வீரர்கள் எதிர்பார்த்ததை விட, அதிக தொகைக்கு ஏலம் போயினர். அதிகபட்சமாக, இஷான் கிஷான் 15.25 கோடி ரூபாய்க்கு மும்பை அணியும், தீபக் சாஹரை 14 கோடி ரூபாய்க்கு சென்னை அணியும், ஷ்ரேயாஸ் ஐயரை 12.25 கோடிக்கு கொல்கத்தா அணியும் எடுத்திருந்தது.
Mr. IPL சுரேஷ் ரெய்னா
பல அணிகளும், சீனியர் மற்றும் இளம் வீரர்கள் என கலவையான அணியையும் ஒரு சேர உருவாக்கியிருந்தது. இதனால், இரண்டு நாள் ஏலமும் விறுவிறுப்பும், பரபரப்பும் நிறைந்தே காணப்பட்டது. இன்னொரு பக்கம், பல அனுபவம் மிக்க வீரர்களை எந்த அணிகளும் எடுக்க ஆர்வம் காட்டாமல் போன சம்பவமும் அரங்கேறியிருந்தது. குறிப்பாக, Mr. IPL என அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னாவை, எந்த அணிகளும் தேர்வு செய்யாமல் போனது, ரசிகர்கள் மத்தியில் அதிகம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
டிம் டேவிட்
இந்நிலையில், அதிக அனுபவம் இல்லாத ஒரு வீரரை, மும்பை இந்தியன்ஸ் அணி, 8.25 கோடி ரூபாய்க்கு எடுத்துள்ளது, பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. சிங்கப்பூர் அணியைச் சேர்ந்த இளம் வீரர் டிம் டேவிட்டைத் தான், மும்பை அணி அதிக தொகை கொடுத்து எடுத்துள்ளது. அந்நாட்டு அணிக்காக, சர்வதேச டி 20 போட்டிகளில் ஆடியுள்ள டிம் டேவிட், சிறப்பான பேட்டிங் சராசரியை வைத்துள்ளார்.
டி 20 சூறாவளி
அதே போல, சமீபத்தில் ஆஸ்திரேலிய நாட்டிற்கு குடி பெயர்ந்த டிம் டேவிட், அங்கு நடைபெறும் பிக் பேஷ் டி 20 லீக் தொடரில் ஆடி, தனது அதிரடி ஆட்டத்தின் மூலம், பலரது கவனத்தையும் பெற்றிருந்தார். இதன் காரணமாக, ஆஸ்திரேலிய சர்வதேச அணியிலும், விரைவில் அவர் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி ஒரு நிலையில் தான், அவரை மும்பை அணி ஏலத்தில் எடுத்துள்ளது.
மும்பை அணியின் பிளான்
ஐபிஎல் தொடரில், அதிக அனுபவம் இல்லாத டிம் டேவிட், கடந்த சீசனின் இரண்டாம் பாதியில், பெங்களூர் அணிக்காக ஒரே ஒரு போட்டியில் களமிறங்கியிருந்தார். அதில் ஒரு ரன் மட்டும் அடித்து டிம் அவுட்டானார். இருந்த போதிலும், மற்ற டி 20 லீக் தொடர்களில், அவர் சிறப்பாக ஆடுவதால், அதிக தொகை கொடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் வாங்கியுள்ளது.
இளம் வீரர்களை அதிகம் குறி வைக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி, டிம் டேவிட்டை குறி வைத்து, தூக்கியுள்ளதால், அவர் மீதான எதிர்பார்ப்பும் இந்த முறை அதிகரித்துள்ளது.