சென்னைக்கு குட் நியூஸ்.. ரெடியாகும் மிகப் பெரிய திட்டம்.. அரசு அதிரடி உத்தரவு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஆண்டுதோறும் பருவ மழைக்காலம் உச்சத்தைத் தொடும் நேரத்தில் தமிழக தலைநகர் வெள்ளத்தில் மிதப்பது வாடிக்கையாகிவிட்டது. குறிப்பாக கடந்த 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளம் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது என்றே சொல்லவேண்டும். இந்நிலையில், சென்னை மக்களை வெள்ள பாதிப்பிலிருந்து காக்க, புதிய திட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, அடையாற்றினை 890 கோடி செலவில் அகலப்படுத்த இருப்பதாக நீர்வளத் துறை தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஆதனூரில் துவங்கி 42 கிலோமீட்டர் தூரம் பயணிக்கும் அடையாற்றின் கரையில் வசிக்கும் நபர்கள் வெள்ள காலங்களில் பல்வேறு துயரத்திற்கு ஆளாகின்றனர். இதனைத் தடுக்கும் வகையிலும் வெள்ள காலத்தில் மக்களை பாதுகாக்கும் நோக்கத்தோடும் ஆற்றை அகலப்படுத்தவேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக வைக்கப்பட்டு வந்தது.
அகலம் குறைந்த ஆறு
ஆரம்ப காலங்களில் 60 முதல் 120 அடி அகலத்துடன் காணப்பட்ட இந்த ஆறு, ஆக்கிரமிப்புகள், சுற்றுச் சூழல் மாசுபாடு ஆகியவை காரணமாக இன்று சில இடங்களில் 20 அடி மட்டுமே அகலம் கொண்டதாக இருக்கிறது.
கடந்த 2015 ஆம் ஆண்டு செம்பரம்பாக்கம் ஏரி, திறந்துவிடப்பட்ட போது சென்னைக்கு அருகில் இருந்த சுமார் 135 நீர்நிலைகள் நிரம்பியது. இவற்றில் இருந்து உபரி நீர் அடையாற்றில் திறந்துவிடப்பட்டதால் கரையோரம் வசித்த மக்கள் வெள்ளத்தில் சிக்கினர் .
ஆக்கிரமிப்புகள் அகற்றம்
இதனையடுத்து, அடையாற்றின் கரை ஓரமாக இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஆற்றை தூர்வார 83 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. அதன்மூலம், பட்டினப்பக்கம் முதல் மணப்பாக்கம் வரையில் ஆறு தூர்வாரப்பட்டது. இருப்பினும் அகலப்படுத்தும் பணி நடைபெறவில்லை. இதானால் கடந்த ஆண்டு மழைக் காலத்தின் போது, ஆற்றின் அருகே இருந்த குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்தது.
அகலப்படுத்தும் பணி
இந்த சிக்கலை முன்வைத்து உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி நீர்வளத்துறை தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. மழைநீர் ஆற்று நீருடன் கலக்கும் வகையில் வடிகால்கள், ஆற்றில் இருந்து உபரி நீரை திருப்பிவிட வடிகால்கள் ஆகியவற்றை அமைக்கவும் ஆற்றை அகலப்படுத்தவும் 893 கோடி செலவில் பணிகளை மேற்கொள்ள விரிவான அறிக்கைகள் தயார் செய்யப்பட்டுக்கொண்டு இருக்கின்றன. இதனை முன்னிட்டு, அடையாறு 60 முதல் 120 அடி அகலப்படுத்தப்பட இருக்கிறது. இதன்மூலம், சென்னை வாசிகளின் வெள்ளம் பற்றிய அச்சத்தைப் போக்க முடியும் என்கிறார்கள் நிபுணர்கள்.