இரவில் தாயுடன் தூங்கிய குழந்தை காலையில் கிணற்றில் இறந்துகிடந்த மர்மம்..! கோவையை அதிர வைத்த சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Jun 24, 2019 02:57 PM

கோவையில் இரவு தாயில் அருகில் தூங்கிய குழந்தை காலையில் கிணற்றில் சடலமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2 year old baby died in Coimbatore

கோவை மாவட்டத்தில் உள்ள அன்னூர் என்ற பகுதியில் கனகராஜ்-காஞ்சனா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். கனகராஜ் அப்பகுதியில் ஜேசிபி இயந்திரம் வாடகைக்கு விடும் தொழில் நடத்தி வருகிறார். இவர்களுக்கு அம்ருதா என்ற இரண்டரை வயது பெண் குழந்தை இருந்துள்ளது.

இந்நிலையில் நேற்று விடுமுறை தினம் என்பதால் காஞ்சனா தனது குழந்தை அம்ருதாவுடன், விளாங்குறிச்சியில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் இரவு அங்கேயே குழந்தையுடன் தூங்கிவிட்டு, அதிகாலையில் எழுந்து பார்த்த போது அருகில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தை இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

பின்னர் வீட்டில் இருந்த அனைவரும் அங்குமிங்குமாக குழந்தையை தேட ஆரம்பித்துள்ளனர். மேலும் இதுகுறித்து போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த போலிஸார் குழந்தையை தீவிரமாக தேடியுள்ளனர். அப்போது வீட்டிற்கு எதிரே அடர்ந்த புதர்களுக்கு மத்தியில் இருந்த பாழுங்கிணற்றில் குழந்தை வாயில் நுரை தள்ளிய நிலையில் சடலமாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் குழந்தையின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். இதனை அடுத்து மர்மமான முறையில் குழந்தை இறந்தது தொடர்பாக போலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : #COIMBATORE #CHILD