அடுத்த ஐ.பி.எல்-க்குத் தயாராகும் கோவை..! சர்வதேசத் தரத்தில் புதிய கிரிக்கெட் மைதானம்..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Saranya | May 17, 2019 06:29 PM
கோவையில் இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்த சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கும் பணிகள் தற்போது முடிவடையும் நிலையில் உள்ளது.
![coimbatore international cricket ground all set for next ipl coimbatore international cricket ground all set for next ipl](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/sports/coimbatore-international-cricket-ground-all-set-for-next-ipl.jpg)
கிரிக்கெட் ரசிகர்களை அதிகம் கொண்ட தமிழ்நாட்டில் சென்னையைத் தவிர்த்து வேறு எங்கும் சர்வதேச கிரிக்கெட் மைதானங்கள் இல்லை என்ற குறை நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது. அதைப் போக்கும் வகையில் கோவையில் அமைக்கப்பட்டு வந்த சர்வதேச கிரிக்கெட் மைதானம் விரைவில் தயாராக உள்ளது.
அவினாசி சாலை, நவ இந்தியாவிலுள்ள எஸ்.என்.ஆர்.கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் அமையவுள்ளது இந்த மைதானம். இதற்கான பணிகள் ரூ.3 கோடி செலவில் இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதில், சர்வதேசத் தரத்தில் 3 பிட்சுகளும், 6 பயிற்சிக்கான பிட்சுகளும் உள்ளன. பெவிலியன், சைடு ஸ்கிரீன், வலைப் பயிற்சி ஆகிய வசதிகள் கொண்ட இங்கு கேலரியும் அமைக்கப்பட உள்ளது.
ஜூன் மாதம் தயாராக உள்ள இந்த மைதானத்தில் உலகக்கோப்பை தொடருக்குப் பிறகு போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே ரஞ்சி டிராஃபி, டி.என்.பி.எல் ஆகிய போட்டிகள் நடப்பது உறுதியாகியுள்ள நிலையில் அடுத்த ஆண்டு இங்கு ஐ.பி.எல் போட்டிகள் நடப்பதற்கும் வாய்ப்புள்ளதாக கோவை கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)