கனரக வாகனம் மீது கார் மோதி கோர விபத்து.. ஒரு குழந்தை உள்பட 7 பேர் பலி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | May 06, 2019 05:04 PM

வேலூரில் ஓரமாக நின்றிருந்த கனரக வாகனத்தின் மீது, கார் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

car accident near vellore 7 dead including one child

வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த வெங்கிளி அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் கனரக வாகனம் ஒன்று நின்றுகொண்டிருந்தது. அப்போது அவ்வழியே வேலூரில் இருந்து பெங்களூர் நோக்கி சென்ற காரின் டயர் வெடித்தது.

இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் நின்று கொண்டிருந்த கனரக வாகனத்தின் பின்புறத்தில் மோதியது. இந்த கோரவிபத்தில் கார் கனரக வாகனத்தின் அடியில் நுழைந்து நசுங்கியது. இதில் காரில் பயணித்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த மெல்வின் தேஷ்முக், அவரது குடும்பத்தைச் சேர்ந்த 3 ஆண்கள், 2 பெண்கள், ஒரு குழந்தை உள்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

தகவலறிந்து சம்பவிடம் சென்ற ஆம்பூர் தாலுகா காவல்துறையினர், உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சுற்றுலாவுக்கு வந்த மெல்வின் தேஷ்முக் மற்றும் அவரது குடும்பத்தினர், மீண்டும் ஊர் திரும்பும்போது இந்த விபத்து நேர்ந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #ACCIDENT #VELLORE #CHILD