'வீட்டிற்கு வெளியே விளையாடிய 3 வயது குழந்தை'... ' டூ வீலரில் குழந்தையை கடத்திய பெண்கள்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | May 22, 2019 05:52 PM

சேலம் அருகே வீட்டுக்கு வெளியில் விளையாடிக்கொண்டிருந்த 3 வயது குழந்தை கடத்தப்பட்டு, சிறிது நேரத்தில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

3 year old child kidnapped and rescued in salem

சேலம் சத்திரம் அருகே முள்ளகாடு பகுதியில் உள்ளது தம்மணன் காலனி. இங்கு வசித்து வரும் பாலாஜி - நித்யா தம்பதியினரின் மூன்று வயது குழந்தை யோகேஸ்வரன் இன்று வீட்டிற்கு வெளியே விளையாடி கொண்டிருந்தான். அப்போது அந்த வழியாக இரண்டு சக்கர வாகனத்தில், சேலைத் தலைப்பால் முகத்தை மூடிய படி வந்த  இரண்டு பெண்கள், குழந்தையை கடத்திச் சென்றனர்.

சிறிதுநேரத்தில் குழந்தை காணாததால் அதிர்ந்த பெற்றோர், காவல்துறையில் புகார் அளித்தனர். இதனையடுத்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், 2 பெண்கள் குழந்தையை தூக்கிச் செல்வதை கண்டறிந்தனர். அதன்பின்னர், கடத்தல் பெண்களை கண்டறிய போலீசார் முழு வீச்சில் இறங்கி தேடி வந்தனர்.

இந்நிலையில், கடத்தப்பட்ட இடத்தில் இருந்து 10 கி.மீ. தூரத்தில் இருக்கும் சேலத்தாம்பட்டி பகுதியில் சாலையோரம் குழந்தையை விட்டுவிட்டு இரண்டு பெண்களும் தப்பிச் சென்றனர். குழந்தை சாலையோரம் இருப்பதை அப்பகுதி மக்கள் பார்த்து, போலீசாருக்கு தகவல் அளித்தனர். இந்த தகவலை அடுத்து காவல்துறையினர் அங்கு சென்று குழந்தையை மீட்டனர். மேலும் கடத்தல்காரர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : #KIDNAPPING #CHILD #SALEM #RESCUED