‘விஷவாயு’ தாக்கி ‘கிணற்றில்’ விழுந்த நபர்கள்.. தீயணைப்பு வீரர் உட்பட 2 பேர் பலி.. ‘அடுத்தடுத்து’ நிகழ்ந்த சோகம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பெரம்பலூர் மாவட்டம் செல்லியம்பாளையம் கிராமத்தில் முருகேசன் என்பவரது வயலில் புதிய கிணறு தோண்டப்பட்டு வரும் நிலையில், அதே கிராமத்தை சேர்ந்த ‘வெடிவைக்கும்’ லட்சுமணன் என்பவர் கிணற்றில் வெடிவைத்து வெட்டியுள்ளார். ஆனால் அப்போதும் தண்ணீர் வராததால், காலை முதல் மாலை வரை கிணற்றில் சைடு போர் போட்டுள்ளார்.
மாலையில் கிணற்றுக்குள் தண்ணீர் வருகிறதா என அதே பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் எட்டிப்பார்த்தபோது, அவரை விஷவாயு தாக்கியதில், மயங்கிக் கிணற்றுக்குள் விழுந்தார். இதைப் பார்த்ததும் அவரை காப்பாற்றச் சென்ற பாஸ்கர் என்பவரும் உள்ளே இறங்க, அவரையும் விஷவாயு தாக்க, அவரும் கிணற்றுக்குள் விழுந்துள்ளார்.
இதனை அடுத்து பெரம்பலூர் தீயணைப்புத்துறைக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த ராஜ்குமார், தனபால், பால்ராஜ் உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் கயிறு கட்டி இறங்கியுள்ளனர். இதில் மீட்கச் சென்ற தீயணைப்பு வீரர் மூவரும் கிணற்றுக்குள் மயங்கி விழுந்ததனர். இதனால் பெரம்பலூர் மாவட்ட தீயணைப்புத்துறைத் தலைவர் தாமோதரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள். ஆக்ஸிஜன் பெட்டிகளுடன் விரைந்து வந்து கிணற்றுக்குள் இறங்கினர். எனினும் 1 மணி நேர நீண்ட போராட்டத்துக்கு பின், பாஸ்கரும், 2 தீயணைப்பு வீரர்களும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஆனால், ராதாகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். இதேபோல், அவரை காப்பாற்ற களமிறங்கிய தீயணைப்பு வீரர்களுள் ஒருவரான ராஜ்குமார் மூச்சுத்திணறி உயிரிழந்தார். பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கிணற்றைப் பார்வையிட்ட பெரம்பலூர் எஸ்.பி. எஸ்.நிஷா பார்த்திபன் ஏ.டி.எஸ்.பி கார்த்திகேயன் ஆகியோர் கிணறு வெட்ட பயன்படுத்தப்பட்ட வெடிமருந்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளனர்.