'காதலருடன் சேர்ந்து'... ‘16 வயது மகள்’... ‘தாய்க்கு செய்த நெஞ்சை உறைய வைக்கும் கொடூரம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பெரம்பலூர் அருகே வளர்ப்புத் தாயை கொடூரமாக கொன்று, தீ வைத்து எரித்துவிட்டு, 16 வயது சிறுமி, காதலனுடன் தப்பிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் பென்னக்கோணம் ஊராட்சிக்கு உட்பட்ட கீழக்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பெருமாள்-பச்சையம்மாள் தம்பதியினர். இவர்களது ஒரே மகன் பழனிவேல் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் சாலை விபத்தில் உயிரிழந்தார். இதனால் வருத்தத்தில் இருந்த பெருமாள்- பச்சையம்மாள் தம்பதியினர் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்கலாம் என்று எண்ணி, அதன்படி ஒரு வயது பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்தனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் முதியவர் பெருமாள் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
இந்நிலையில் பள்ளிக்குச் சென்று வந்த 16 வயது வளர்ப்பு மகள், அதே ஊரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரை காதலித்து வந்தார். இருவரும் ஆறு மாதங்களுக்கு முன்னர் ரகசிய திருமணம் செய்துகொண்டதால் அந்த சிறுமி படிப்பை பாதியிலேயே கைவிட்டதாக கூறப்படுகின்றது. இந்த விஷயம் தெரிந்ததும் மூதாட்டி பச்சையம்மாள் கடுமையாக தனது வளர்ப்பு மகளை கண்டித்துள்ளார். இதனால் மணிகண்டனைப் பிரிந்து இருப்பது போல் நடித்துவந்த அந்த சிறுமி, பச்சையம்மாள் கண்ணயர்ந்து தூங்கியதும், செல்ஃபோன் மூலம் காதலன் மணிகண்டனை வரவழைத்து மொட்டை மாடியில் சந்தித்து பேசியுள்ளார்.
அண்மையில் ஒரு நாள் இருவரும் மாடியில் ஒன்றாக இருப்பதை பார்த்த பச்சையம்மாள் இருவரையும் பிடித்து கண்டித்ததோடு மணிகண்டனை இனிமேல் வீட்டுக்கு வராதே என்று விரட்டியுள்ளார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் பச்சையம்மாள் சடலமாக கிடந்தார். கியாஸ் கசிந்து தீப் பிடித்து பச்சையம்மாள் இறந்துவிட்டதாக, ஊர் மக்களிடம் தெரிவித்த வளர்ப்பு மகளான சிறுமி, காலன் மணிகன்டனுடன் தலைமறைவானதாக கூறப்படுகின்றது.
இதையடுத்து மூதாட்டியின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் தலைமறைவான காதல் ஜோடியை தேடி வந்தனர். இந்நிலையில் கடலூர் மாவட்டம் தொழுதூரில் உள்ள லாட்ஜ் ஒன்றில் மணிகண்டனும், சிறுமியும் தங்கியிருந்ததை அறிந்த போலீசார், அங்கு சென்று அவர்களை பிடித்து விசாரித்தபோது பச்சையம்மாள் மரணம் குறித்து திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. சம்பவத்தன்று மணிகண்டன் குடி போதையில் , சிறுமியை சந்திக்கச் சென்றுள்ளார். அப்போது அவரை வீட்டிற்குள் விட மறுத்து பச்சையம்மாள் கண்டித்ததால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் அவரை எட்டி உதைத்து கீழே தள்ளியுள்ளார். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் நெற்றிப்பொட்டில் அடிபட்டு மூதாட்டி பச்சையம்மாள் மயங்கி விழுந்துள்ளார்.
பின்னர் சிறுமியுடன் சேர்ந்து வீட்டுக்கு வெளியே இருந்த கல்லை தூக்கி வந்து பச்சையம்மாளின் தலையில் போட்டு நசுக்கி இருவரும் சேர்ந்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். இதனை தீ விபத்தாக மாற்ற எண்ணி அவர் மீது மண்ணெண்னையை ஊற்றி கியாஸ் அடுப்பை திறந்து தீப்பற்ற வைத்து, கேஸ் கசிவி விபத்தில் பச்சையம்மாள் இறந்துவிட்டதாக நாடகமாடி தப்பிச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், பெரம்பலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
