அம்மாவின் ‘இறுதிசடங்கு’ முடிந்த கையோடு வேலைக்கு திரும்பிய ‘தூய்மை பணியாளர்’.. நெஞ்சை உருக்கிய அவரின் பதில்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தாயின் இறுதிசடங்கு முடிந்த சில மணிநேரத்தில் கொரோனா தடுப்பு பணிக்கு திரும்பிய தூய்மை பணியாளரின் செயல் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்த வி.களத்தூரில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இளைஞர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தீவிர சிகிச்சைக்குப்பின் குணமடைந்து அவர் வீடு திரும்பினார். இதனைத் தொடர்ந்து அதே ஊரில் உள்ள காவல்நிலையத்தில் பணியாற்றி வரும் தலைமை காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் காவல் நிலையம் மூடப்பட்டு, காவலர் வாகனம் தற்காலிக காவல்நிலையமாக செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வி.களத்தூர் கிராமத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி வரும் அய்யாதுரை என்பவரின் தாய் அங்கம்மாள் நேற்று மதியம் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். ஆனால் இதற்காக அய்யாதுரை விடுப்பு எடுக்கவில்லை. தாயின் இறுதி சடங்கை முடித்த கையோடு மீண்டும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட தொடங்கினார்.
இதுகுறித்து தெரிவித்த அய்யாதுரை, ‘அம்மாவுக்கு வயது 80 ஆகுது. சர்க்கரை நோய் இருந்ததால், உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது. கடந்த 10 நாள்களாகவே அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று மதியம் எதிர்பாராதவிதமாக அம்மா தவறிட்டாங்க. கொரோனா பிரச்சனை காரணமாக சொந்தக்காரங்க யாரும் வர முடியாத சூழல். நான் ஊரின் தூய்மை பணியாளராக இருப்பதனால், எனக்கு ஊரோட நிலவரமும், கொரோனா நோய் குறித்தும் நன்றாக தெரியும். 20 வருஷத்துக்கும் மேலாக பஞ்சாயத்தில் தூய்மை பணியாளராக வேலை பார்க்கிறேன்.
எப்போதும் இல்லாத அளவுக்கு நெருக்கடி இருப்பதையும், ஊரடங்கால் மக்கள் படும் கஷ்டங்களையும் தினம்தினம் நேரில் பார்க்கிறேன். அதனால் அம்மாவின் உடலை நீண்ட நேரம் வைத்திருக்க மனம் ஒப்பவில்லை. சில மணிநேரம் வைத்திருந்தோம். பின் 4:30 மணியளவில் குறைந்த நபர்களோடு அம்மாவை அடக்கம் செய்தோம்.
எனக்கும் நான்கு குழந்தைங்க இருக்காங்க. நம்மைப்போல பிள்ளை குட்டிகளை வைத்து ஜனங்க கஷ்டப்படுவதை பார்க்கிறோம். அதனால் அம்மாவை நினைத்து வீட்டில் முடங்கி கிடக்க மனமில்லை. வழக்கம்போல எனது பணிக்கு திரும்பிவிட்டேன்’ என அய்யாதுரை தெரிவித்துள்ளார். இறந்த அம்மாவின் உடலை அடக்கம் செய்த கையோடு கொரோனா தடுப்பு பணிக்கு திரும்பிய தூய்மை பணியாளர் அய்யாதுரைக்கு பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
News & Photo Credits: Vikatan
