‘வயித்துல கட்டி வளர்ந்துட்டு இருக்கு’.. பதறி ஹாஸ்பிட்டலுக்கு போன பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. சிறுமிக்கு நடந்த கொடுமை..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தொழிற்சாலையில் வேலைக்கு வந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த கீழ்புதுப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் தணிகாசலம் (40). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளார் அதே தொழிற்சாலையில் ராணிபேட்டை அடுத்த நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியும் வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் அந்த சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி பழகிய தணிகாசலம், பலமுறை கட்டாயப்படுத்தியும், மிரட்டியும் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார். ஆனால் தணிகாசலம் மிரட்டி வந்ததால், இந்த விஷயத்தை பெற்றோரிடம் சொல்லாமல் மறைத்து வந்துள்ளார். இந்த நிலையில் சிறுமியின் உடலில் மாற்றம் ஏற்படுவதை கண்ட பெற்றோர் மகளிடம் விசாரித்துள்ளனர். அதற்கு வயிற்றில் கட்டி உள்ளது என்றும், அது வளர்ந்து வருவதாகவும் சிறுமி தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனே சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியிடம் விசாரித்துள்ளனர். அப்போது தனக்கு நடந்த கொடுமையை சிறுமி கண்ணீரிடன் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் தணிகாசலத்தை போலீசார் பிடித்து விசாரித்துள்ளனர். அப்போது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததை தணிகாசலம் ஒப்புக்கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
