வேகமாக வந்த ‘சைரன் வச்ச கார்’.. மடக்கி பிடித்த போலீசார்.. விசாரணையில் அதிரவைத்த இளைஞர் பதில்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஊரடங்கில் சைரன் விளக்குகள் பொருத்திய காரில், ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஊரை சுற்றி வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டிருந்ததது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகமானதால் ஊரடங்கை மே மாதம் 3ம் தேதி வரை நீட்டித்து பிரதமர் மோடி அறிவித்தார். இதனால் மக்கள் அத்தியாவசிய தேவை இல்லாமல் வெளியே வர வேண்டாம் என்றும், மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் உரிய காரணம் இன்றி வாகனங்களில் வெளியே சுற்றுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்தும், வாகனங்களை பறிமுதல் செய்தும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் டெல்லியில் உள்ள கேஷவ்புரம் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை போலீசார் வாகனச்சோதனையில் ஈடுபட்டு இருந்துள்ளனர். அப்போது சைரன் விளக்கு, இந்திய அரசாங்கம் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட கார் ஒன்று வேகமாக வந்துள்ளது. உடனே அந்த காரை மறித்து போலீசார் சோதனை செய்துள்ளனர். விசாரணையில் காரை ஓட்டி வந்த நபர் ஆதித்யா குப்தா (29) என்பது தெரியவந்துள்ளது.
மேலும் தான் ஒரு மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி என்றும், மத்திய உள்துறை அமைச்சகத்தில் வேலை செய்தவாகவும் கூறியுள்ளார். இதனை அடுத்து ஐ.ஏ.எஸ் அதிகாரி என்பதற்கான அடையாள அட்டையை காண்பிக்குமாறு போலீசார் கேட்டுள்ளனர். ஆனால் தன்னிடம் தற்போது அடையாள அட்டை இல்லை என அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவர் ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருவதும், ஐ.ஏ.எஸ் அதிகாரி என கூறி ஊரடங்கு காலத்தில் பல இடங்களில் சுற்றி திரிந்ததும் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.