7 தனிப்படைகள்... 3 மொழி போஸ்டர்!... வாட்ஸ் அப் மெசேஜ்!... விழுப்புரத்தில் மாயமான கொரோனா நோயாளி சிக்கியது எப்படி?... தமிழக போலீஸின் தரமான 'த்ரில்' சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | Apr 15, 2020 01:04 PM

விழுப்புரத்தில் சிகிச்சை பெற்று வந்த வெளிமாநில கொரோனா நோயாளியை மூன்று மொழிகளைப் பயன்படுத்தி போலீஸார் சாதுர்யமாக வளைத்துப் பிடித்துள்ளனர்.

how tn police arrested the covid19 positive patient in villupuam

விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 23 பேருக்கு (தப்பியோடிய டெல்லி வாலிபர் உட்பட) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில் அவர்கள் அனைவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 7-ம் தேதி செவ்வாய்க்கிழமை கொரோனா தொற்று சந்தேகத்தின் அடிப்படையில் அனுமதிக்கப்பட்டிருந்த 26 பேரை தொற்று இல்லை என்று வீட்டுக்கு அனுப்பியது மருத்துவமனை நிர்வாகம்.

ஆனால், மறுநாளே, கொரோனா தொற்று இல்லை என்று அனுப்பி வைக்கப்பட்ட 26 பேர்களில் 4 பேருக்கு தொற்று இருப்பதாக சுகாதாரத்துறை மூலம் காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து அந்த 4 பேரில் 3 பேர் விழுப்புரத்தைச் சேர்ந்தவர்களாக இருந்ததால், உடனே அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், டெல்லி மாநிலத்தைச் சேர்ந்த 4-வது நபர் எங்கு சென்றார் என்பது தெரியாத நிலையில், அவர் மீது பேரிடர் மேலாண்மை சட்டம் மற்றும் நோய்த் தொற்று தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடத் தொடங்கியது காவல்துறை.

அதேபோல விழுப்புரம், கள்ளக்குறிச்சி, புதுச்சேரி, கடலூர், திருவண்ணாமலை, வேலூர் பகுதியில் காவல் நிலையத்துக்கு மாயமான இளைஞரின் புகைப்படம், அவரது விவரங்கள் தெரிவிக்கப்பட்டது. மாயமான அந்த நபரை பிடிக்க விழுப்புரம் மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் தலைமையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்நிலையில் தேடப்பட்டு வரும் நபர், செங்கல்பட்டு படாளம் பகுதி அருகே இருப்பதாக லாரி ஓட்டுநர் மூலம் விழுப்புரம் எஸ்.பி ஜெயக்குமாருக்குத் தகவல் வந்திருக்கிறது.

மாலை 4.30 மணிக்கு தகவல் வந்த நிலையில் 105 கிலோமீட்டர் தொலைவுள்ள அந்த இடத்துக்கு சக அதிகாரிகளுடன் விரைந்து சென்ற தனிப்படைகள் தலைவர் எஸ்.பி ஜெயக்குமார், அங்கு தூங்கிக்கொண்டிருந்த 4-வது நபரை வளைத்துப் பிடித்து கைது செய்தார். அதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை பாதுகாப்பாக அழைத்து வந்து விழுப்புரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி எஸ்.பி. ஜெயக்குமார் கூறுகையில், "கடந்த 7-ம் தேதி கொரோனா தொற்று இல்லை என்று வீட்டுக்கு அனுப்பப்பட்ட 26 பேரில் நால்வருக்கு தொற்று இருப்பதாக மறுநாள் எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனையில் கொடுத்திருந்த முகவரியில் அவர் இல்லாததுடன், அவரது செல்போன் எண்ணும் வேலை செய்யவில்லை. அதையடுத்து அவரது அடையாளங்களைப் புகைப்படத்துடன் அனைத்துக் காவல் நிலையங்களுக்கும் அனுப்பி வைத்தோம். அத்துடன் நேற்று அந்த விபரங்களை தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய 3 மொழிகளில் அடிக்கப்பட்ட போஸ்டர்களை உளுந்தூர்பேட்டையில் இருந்து சென்னை வரை ஒட்டினோம்.

மாயமான அந்த நபர் செங்கல்பட்டு படாளத்தில் இருக்கும், லாரி ஓட்டுநர்கள் தங்குமிடத்தில் (Lay Bay) 4 பேருடன் தங்கியிருக்கிறார். அதில் இந்தி மொழி தெரிந்த ஒரு ஓட்டுநர் நாங்கள் அடித்த போஸ்டரைப் பார்த்திருக்கிறார். உடனே தப்பியோடிய நபருக்கு தெரியாமல், அந்த விபரத்தை தமிழும் இந்தியும் தெரிந்த மற்றொரு ஒட்டுநரிடம் தெரிவித்திருக்கிறார். அதையடுத்துதான் எங்களைத் தொடர்புகொண்ட அந்த ஓட்டுநர், `நீங்கள் தேடும் ஆள் எங்களுடன்தான் தங்கியிருக்கிறார்' என்று தகவல் கொடுத்தார். உடனே அவரது புகைப்படத்தை வாட்ஸ் அப்பில் அனுப்பும்படி கூறினோம். வாட்ஸ்அப்பில் வந்த புகைப்படத்தில் இருப்பது தப்பியோடியவர்தான் என்பதை உறுதிப்படுத்தியவுடனேயே அங்கு விரைந்தோம்" என்றார்.