'வீட்டிலிருந்தே' வேலை செய்பவர்கள்... 'இதையெல்லாம்' மட்டும் பண்ணிடாதீங்க... 'எச்சரித்துள்ள' மத்திய 'சைபர்' பிரிவு...
முகப்பு > செய்திகள் > இந்தியாவீட்டில் இருந்து வேலை செய்பவர்களுடைய கணினிகள் இணையம் வழியாக ஹேக் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாக மத்திய சைபர் பிரிவு எச்சரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதால் நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது வீட்டில் இருந்து வேலை செய்து வருபவர்களுடைய கணினியில் உள்ள தகவல்கள் இணையம் மூலம் திருடப்பட வாய்ப்புள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சைபர் பிரிவு எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய சைபர் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், "பணியாளர்கள் தங்களுடைய அலுவலங்களில் இணைய சேவையை பயன்படுத்துவதற்கும் வீட்டில் இருந்து இணைய சேவையை பயன்படுத்துவதற்கும் பல வித்தியாசங்கள் உள்ளன. அலுவலகங்களில் செய்யப்பட்டிருக்கும் இணைய சேவைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் வீட்டில் பயன்படுத்தும்போது இருக்காது. பொது இணைய சேவை மூலம் உங்களுடைய கணினி ஹேக் செய்யப்பட்டு, தகவல் திருடப்படலாம் என்பதால் பொது இலவச வைஃபை சேவையை பயன்படுத்த வேண்டாம்.
மேலும் உங்களுடைய கணினி மற்றும் லேப்டாப்பில் ஆன்டி வைரஸ் மென்பொருள் முறையாக செயல்படுகிறதா என அடிக்கடி சோதனை செய்து பார்க்க வேண்டும். தேவையில்லாத செயலிகளை பதிவிறக்கம் செய்வது, அலுவலக வேலைகளை செய்யும் சாதனங்களில் சமூக வலைதளத்தைப் பயன்படுத்துவது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். அத்துடன் உங்களுடைய கடவுச்சொல்லையும் பலமானதாக வைக்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
