'அம்மா'வ யாருக்கு தான் புடிக்காது!?... 'நான் பட்ட கஷ்டம் அவ்ளோ ஈஸி இல்ல!'... 3 நாட்கள்... 1100 கி.மீ... தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்க தவப் புதல்வனின் பாசப் போராட்டம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manishankar | Apr 13, 2020 12:57 PM

தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக, ஒரு போலீஸ்காரர் சரக்கு ரெயில், லாரி, படகு ஆகியவற்றில் மாறி மாறி 1,100 கி.மீ. பயணம் செய்து சொந்த கிராமத்துக்கு சென்றுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

up cop travels for 3 days to attend his mothers funeral

உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டம் சிகார் கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ் யாதவ் (வயது 30). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவருக்கு சத்தீஷ்கார் ஆயுதப்படை போலீசில் வேலை கிடைத்ததனால் மனைவி, குழந்தைகளை கிராமத்திலேயே விட்டுவிட்டு, சத்தீஷ்கார் மாநிலத்தில் உள்ள பிஜப்பூரில் உள்ள ஆயுதப்படை போலீஸ் முகாமில் பணியாற்றி வருகிறார். நக்சல் ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், கடந்த 4-ந் தேதி, உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரது தாயார் இறந்துவிட்டார். இந்த செய்தி சந்தோஷ் யாதவுக்கு தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து தாயாரின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக, மேல் அதிகாரியிடம் சந்தோஷ் யாதவ் விடுமுறை கேட்டார். விடுமுறை கிடைத்தவுடன், 7-ந் தேதி காலையில் ஊருக்கு புறப்பட்டார்.

ஊரடங்கையொட்டி, போக்குவரத்து முடக்கப்பட்டிருந்த போதிலும், எப்படியாவது ஊருக்கு போய்ச்சேர வேண்டும் என்பதே அவரது நோக்கமாக இருந்தது. அதனால், சரக்கு ரெயில், லாரி, படகு என கிடைத்த வாகனங்களில் எல்லாம் பயணம் செய்து 3 நாட்கள் கழித்து 10ம் தேதி சொந்த ஊரை அடைந்தார்.

பயணம் செய்தது எப்படி என்பது குறித்து சந்தோஷ் யாதவ் கூறியதாவது:-

பிஜப்பூரில் இருந்து புறப்பட்டவுடன், முதலில் தலைநகர் ராய்ப்பூருக்கு சென்று விட்டால், எப்படியாவது வாகனங்கள் கிடைக்கும் என்று கருதினேன். முதலில், நெல்மூட்டை லாரியில் ஏறி, ஜகதால்பூர் சென்றடைந்தேன். அங்கு 2 மணி நேரம் காத்திருந்த பிறகு, மினி லாரி தென்பட்டது. அதில் ஏறி, கொண்டேகான் என்ற இடத்தை அடைந்தேன்.

அங்கு போலீசார் என்னை நிறுத்தினர். அவர்களிடம் என் நிலைமையை சொன்னேன். அங்கிருந்த ஒரு அதிகாரி, எனக்கு அறிமுகமானவர் என்பதால், ஒரு மருந்துப்பொருள் ஏற்றிச்சென்ற வாகனத்தில் என்னை ராய்ப்பூருக்கு அனுப்பி வைத்தார்.

ராய்ப்பூரில், எனக்கு தெரிந்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ்காரர் உதவியால், சரக்கு ரெயிலில் பயணித்தேன். 8 சரக்கு ரெயில்களில் மாறிமாறி பயணித்து, என் கிராமம் அருகே உள்ள சுனாரில் இறங்கினேன்.

அங்கிருந்து 5 கி.மீ. நடந்து சென்று கங்கை ஆற்றை அடைந்தேன். அங்கு படகில் பயணம் செய்து எனது கிராமத்துக்கு போய்ச் சேர்ந்தேன். 3 நாட்களாக 1,100 கி.மீ. பயணித்து, 10-ந் தேதி காலையில்தான் ஊரை அடைந்தேன்.

என் கிராமத்தை சேர்ந்த 78 பேர் ரெயில்வேயில் பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் எனக்கு உதவியாக இருந்தனர். நான் பட்ட கஷ்டம், நக்சலைட்டுகளுடனான சண்டைக்கு சற்றும் சளைத்தது அல்ல. இருப்பினும், மக்களின் பாதுகாப்புக்கு ஊரடங்கு அவசியமானதுதான். இவ்வாறு அவர் கூறினார்.