வீட்டில் ‘கோபித்துக்கொண்டு’ ரயில் நிலையம் வந்த சென்னை மாணவி.. ‘ஆறுதலாக பேசிய இளைஞரால் அடுத்து நடந்த கொடூரம்’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Nov 28, 2019 08:35 PM

சென்னை எம்.ஜி.ஆர் ரயில் நிலையத்தில் தனியாக இருந்த மாணவி ஒருவரிடம் இளைஞர் தவறாக நடந்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chennai School Girl Sexually Abused In MGR Central Station

சென்னை எம்.ஜி.ஆர் ரயில் நிலையம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் வசித்துவரும் 10ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் குடும்பத்தினரிடம் சண்டை போட்டு விட்டு ரயில் நிலையத்திற்கு வந்து தனியே அமர்ந்திருந்துள்ளார். பொருளாதாரத்தில் பின்தங்கிய சிறுமியின் குடும்பத்தினருக்கு அவர் உட்பட 3 பெண் குழந்தைகள் உள்ளனர். குடும்பத்தில் நடந்த சில சம்பவங்களால் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி ரயில் மூலம் வெளியூர் சென்று ஏதாவது வேலை செய்து வாழலாம் என நினைத்துள்ளார்.

பகல் முழுவதும் ரயில் நிலையத்திலேயே இருந்த சிறுமியை அங்கிருந்த காஷ்மீரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கவனித்து வந்துள்ளார். பின்னர் இரவானதும் சிறுமியிடம் வந்து பேச்சுக் கொடுத்த அந்த இளைஞர் அவருக்கு டீ, உணவு ஆகியவற்றை வாங்கிக் கொடுத்து அன்பாக கவனித்துக் கொண்டுள்ளார். பின் சிறுமியின் கதையைக் கேட்டு தெரிந்துகொண்ட அந்த இளைஞர், என்னுடன் காஷ்மீருக்கு வருகிறாயா எனக் கேட்டுள்ளார். அதற்கு சிறுமியும் சம்மதம் தெரிவித்துள்ளார்.

பின்னர் நேரம் செல்லச் செல்ல பிளாட்பாரத்தில் கூட்டம் குறைந்ததை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட அந்த இளைஞர் சிறுமியை அழைத்துக்கொண்டு காலியான ரயில் பெட்டி ஒன்றிற்குள் ஏறியுள்ளார். பின்னர் அவர் அங்கு சிறுமியிடம் தவறாக நடந்துகொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து பிளாட்பாரத்தில் உட்கார்ந்து அந்த சிறுமி அழுதுகொண்டிருப்பதை பார்த்த போலீஸார் அவரிடம் விசாரித்துள்ளனர். அப்போது சிறுமி நடந்ததைக் கூற அந்த இளைஞரும் உடன் இருந்துள்ளார்.

இதையடுத்து அந்த இளைஞர்மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் சிறுமியை அவருடைய பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். பின்னர் சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு, அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மோகன்லால் என்ற அந்த இளைஞர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நடந்து 2 வாரங்கள் ஆன நிலையில் தற்போதுதான் வெளியில் தெரியவந்துள்ளது. எப்போதுமே மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் ரயில் நிலையத்திலேயே இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #MGR #CHENNAI #CENTRAL #STATION #GIRL #SEXUAL #ABUSE