"அப்ப எல்லாம் யாரும் வாய் தொறக்கல... இப்போ மட்டும் அவங்களுக்கு என்ன 'பிரச்சனை'??.." கடுப்பாகி கேள்வி கேட்ட 'கோலி'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இதுவரை மூன்று டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், கடைசி டெஸ்ட் போட்டி நாளை அகமதாபாத் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
முன்னதாக, இதே அகமதாபாத் மைதானத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றிருந்த நிலையில், இரண்டு நாட்களுக்குளேயே இந்த டெஸ்ட் போட்டி முடிவடைந்தது. இந்த போட்டியில், முழுக்க முழுக்க சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தியிருந்த நிலையில், பிட்ச் மிகவும் மோசமாக வடிவமைக்கப்பட்டிருந்ததாக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர்கள் பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.
கடைசி டெஸ்ட் போட்டியிலும், சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாகவும், தரமில்லாத பிட்ச்சாக தான் தயார் செய்யப்படும் என்றும் முன்னாள் வீரர்கள் தொடர்ந்து குறை கூறி வருகின்றனர். இந்நிலையில், நாளைய போட்டியில் மைதானம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதனையடுத்து, இந்திய கேப்டன் விராட் கோலி, இறுதி டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மைதானம் குறித்த விமர்சனம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். 'ஒரு டெஸ்ட் போட்டியை 5 நாட்கள் வரை கொண்டு செல்ல வேண்டியா நாங்கள் ஆடுகிறோம்?. போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டும் தான் ஆடுகிறோம்.
நியூசிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் ஒன்றில், நாங்கள் மூன்று நாட்களுக்குள் தோல்வியடைந்தோம். அப்போது யாரும் பிட்ச் பற்றி குறை கூறவில்லை. இந்திய அணி மோசமாக ஆடியது என்று தான் விமர்சனம் செய்தனர். ஆனால், இப்போது இரண்டு நாட்களில் டெஸ்ட் முடிவடைந்ததும் பிட்ச் பற்றி குறை கூறுகிறார்கள். அணியை மேம்படுத்துவதில் மட்டுமே நாங்கள் கவனம் செலுத்துகிறோம். மற்றபடி, பிட்ச் குறித்து நாங்கள் கவலைப்படுவதில்லை. பிட்ச் மற்றும் பந்தில் மட்டும் ஏன் இத்தனை கவனமுள்ளது என்பது எனக்கு புரியவில்லை.
சுழலும் தன்மை கொண்ட ஆடுகளங்கள் குறித்த உரையாடல் தற்போது அதிகமாக இருக்கிறது. அதிகம் சுழலும் ஆடுகளங்களை மட்டும் விமர்சிப்பது ஏற்புடையதல்ல. மூன்றாவது போட்டியில் இரு அணி பேட்ஸ்மேன்களும் போதுமான திறனுடன் ஆடவில்லை என்பதாக தான் எனக்கு தோன்றுகிறது' என பிட்ச் பற்றி தொடர்ந்து விமர்சனம் செய்தவர்களுக்கு கோலி பதிலடி கொடுத்துள்ளார்.