"அவரு சொன்ன மத்த விஷயம் எல்லாம் 'ஓகே'... ஆனா, இத மட்டும் 'எப்படி'ங்க 'ACCEPT' பண்ணிக்கிறது?..." 'யுவராஜ்' கருத்திற்கு 'பரபரப்பு' பதில் சொன்ன 'கம்பீர்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளிடையே, அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டி, இரண்டு நாட்களுக்குள் முடிவடைந்தது.
இந்த போட்டி, முழுக்க முழுக்க சுழற்பந்து வீச்சாளர்கள் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில், பிட்ச் தரமானதாக இல்லை என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர்கள் பலர் குற்றஞ்சாட்டியிருந்தனர். அது மட்டுமில்லாமல், இந்த டெஸ்ட் போட்டி முடிவடைந்ததும், இந்திய முன்னாள் வீரர் யுவராஜ் சிங் கூட அகமதாபாத் பிட்ச்சை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
இரண்டு நாட்களிலேயே போட்டி முடிவடைவது டெஸ்ட் போட்டிக்கு சிறந்தது இல்லை என்றும், இப்படி ஒரு மைதானத்தில் ஹர்பஜன் சிங் அல்லது அணில் கும்ப்ளே ஆகியோர் பந்து வீசியிருந்தால் நிச்சயம் 800 அல்லது 1000 விக்கெட்டுகள் வரை எடுத்திருப்பார்கள் என்றும், யுவராஜ் சிங் தனது ட்வீட்டில் குறிப்பிட்டிருந்தார். இங்கிலாந்து வீரர்கள் பலர் இந்திய பிட்ச்சை விமர்சனம் செய்து வந்த நிலையில், யுவராஜ் சிங்கும் விமர்சனம் செய்தது, ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், யுவராஜ் சிங் கருத்து பற்றி மற்றொரு இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார். 'யுவராஜ் சிங் சொன்ன ஒரு கருத்தை நான் ஆதரிக்கிறேன். அதாவது, அணில் கும்ப்ளே மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் 1000 அல்லது 800 விக்கெட்டுகள் வரை எடுத்திருப்பார்கள் என்பதை. ஏனெனில், இந்த காலத்தில் வந்த டிஆர்எஸ் (DRS) முறை அன்றே இருந்திருந்தால், அணில் கும்ப்ளே 1000 விக்கெட்டுகளும், ஹர்பஜன் சிங் 800 விக்கெட்டுகளும் எடுத்திருப்பார்கள். குறிப்பாக, இந்தியாவில் ஆடும் போது, இன்சைட் எட்ஜ் மற்றும் பேட்டின் விளிம்பில் பட்டு கேட்ச் ஆகுதல் ஆகியவை டிஆர்எஸ் இருந்திருந்தால், விக்கெட்டுகளாக மாறி இருக்கும்.
யுவராஜ் சிங் சொல்வதை இந்த கோணத்தில் மட்டும் நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், பிட்ச் விவகாரத்தில் நான் அவர் கருத்துடன் ஒத்துப் போக மாட்டேன். பிட்ச் என்பது இரு அணிகளுக்கும் ஒன்று தான். எனக்கு இப்படிபட்ட பிட்ச் தான் வேண்டுமென்று அஸ்வின் கேட்கவில்லை. அணி நிர்வாகம் தான் இப்படிப்பட்ட பிட்ச் கேட்கிறது. இதனால், இது போன்ற பிட்ச்களில் பந்து வீச, அஸ்வினுக்கு தான் நெருக்கடி அதிகம்' என கம்பீர் கூறியுள்ளார்.