'இளம்' வீரருக்கு 'கோலி' அனுப்பிய 'மெசேஜ்'... "ஏதோ 'கனவு' மாதிரி இருந்துச்சு..." கேப்டன் செயலால் 'ஃபீல்' செய்த 'வீரர்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசில தினங்களுக்கு முன் ஐபிஎல் மினி ஏலம் சென்னையில் மிகச் சிறப்பாக நடந்து முடிந்த நிலையில், பல வீரர்கள் எதிர்பார்த்ததை விட, அதிக தொகைக்கு ஏலம் போயினர்.

அதிலும் குறிப்பாக, ஆல் ரவுண்டர்கள் மற்றும் பந்து வீச்சாளர்களை எடுக்க அனைத்து அணிகளுக்கு இடையேயும், கடுமையான போட்டி நிலவியது. முன்னதாக, அனைத்து ஐபிஎல் சீசன்களிலும் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக கருதப்படும் பெங்களூர் அணி, இதுவரை ஒரு முறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை.
இதனால், இந்த முறை கோப்பையை நிச்சயம் வெல்ல வேண்டிய நோக்கில் அணியை இன்னும் பலப்படுத்த மேக்ஸ்வெல், ஜெமிசன் உள்ளிட்ட சில முக்கிய வீரர்களை அதிக தொகைக்கு பெங்களூர் அணி ஏலம் வாங்கியது. அதே போல, சமீபத்தில் நடந்து முடிந்த சையது முஷ்டாக் அலி தொடரில் கேரளா அணியில் இடம் பிடித்திருந்த இளம் வீரர் முகமது அசாருதீனையும் பெங்களூர் அணி வாங்கியிருந்தது.
சையது முஷ்டாக் அலி தொடரில், மும்பை அணிக்கு எதிரான போட்டியில், 54 பந்துகளில் 137 ரன்கள் அடித்து பட்டையை கிளப்பியிருந்தார் அசாருதீன். அப்போதே இவர் ஐபிஎல் தொடரில் இடம்பெறுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இதனையடுத்து, பெங்களூர் அணிக்காக அசாருதீன் தேர்வானதும் பெங்களூர் கேப்டன் விராட் கோலி, அசாருதீனுக்கு மெசேஜ் ஒன்றை அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து அசாருதீன் கூறுகையில், 'ஏலம் நடைபெற்று முடிந்த அடுத்த இரண்டு நிமிடங்களில் எனக்கு கோலி மெசேஜ் அனுப்பினார். 'ஆர்சிபி அணிக்கு உங்களை வரவேற்கிறோம். சிறப்பாக ஆடுங்கள்' என அவர் மெசேஜ் செய்தார். அதைக் கண்டதும் நான் அதிகம் உணர்ச்சிவசப்பட்டேன். இது எல்லாம் எனக்கு கனவு போல இருந்தது.
நான் கிரிக்கெட்டில் அதிகம் நேசிக்கும் வீரர் விராட் கோலி. அவர் இருக்கும் அணியில் இடம்பெற்று, அவருடன் இணைந்து ஆடவிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. எனது அணிக்கு, என்ன தேவையோ அதனை நிச்சயம் செய்து காட்டுவேன்' என அசாருதீன் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
