'எங்க இஷ்டத்துக்குலாம் எதுவும் பண்ண முடியாது...' 'முன்னாள் பிட்ச் தயாரிப்பாளர் கூறும்...' - அதிர வைக்கும் தகவல்கள்...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஓய்வு பெற்ற கிரிக்கெட் மைதான பிட்ச் தயாரிப்பாளர் இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகத்தின் மீது தன் வெளிப்படையான கருத்தை தெரிவித்துள்ள செய்தி தற்போது கிரிக்கெட் உலகில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் இந்திய கிரிக்கெட் இடதுகை சுழற்பந்து வீச்சாளரான குஜராத்தைச் சேர்ந்த 73 வயது திராஜ் பர்சானா என்பவர் 2 டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்காக ஆடியுள்ளார். அதன்பின் 1983 முதல் 2012-ல் இங்கிலாந்து ஆடியது வரை அகமதாபாத் மொடீரா ஸ்டேடியத்தின் (நரேந்திர மோடி ஸ்டேடியம்) பிட்ச் தயாரிப்பில் ஈடுபட்டிருந்துள்ளார்.
தற்போது ஓய்வு பெற்று விட்ட திராஜ் பர்சானா இப்போதைய பிட்ச் தயாரிப்பாளருக்கு சுதந்திரம் இல்லை, இந்திய அணிக்குச் சார்பாக பிட்ச் தயாரிக்கச் சொல்கிறார்கள். அதாவது இந்திய அணி நிர்வாகம் என்ன கேட்கிறதோ அதைச் செய்ய வேண்டியதுதான் வேலை என்கிறார், நடுநிலையுடன் பிட்ச் தயாரிக்க அனுமதிக்கப்படுவதில்லை எனக் கூறி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து 'தி இந்து' ஸ்போர்ட் ஸ்டார் ஊடகத்துக்கு திராஜ் பார்சனா அளித்த பேட்டியில், கடந்த 10 ஆண்டுகளாகச் எந்தவித சுதந்திரமும் இல்லாமல் போய் கொண்டிருக்கிறது. நான் பிட்ச் போடும் வரையில் 5 நாட்கள் டெஸ்ட் போட்டி நடைபெறும் என்பதற்கு ஏற்பத்தான் போடுவேன்.
இப்போதெல்லாம் பிட்ச் போடுபவர் தன் இஷ்டத்துக்குச் செய்ய முடியாது, மேலிருந்து வரும் உத்தரவின்படித்தான் செய்யவேண்டும். நான் குஜராத் கிரிக்கெட் சங்கத்தில் 36 ஆண்டுகள் ஊழியனாகப் பணியாற்றினேன். அதனால் அவர்கள் சொல்வதைத்தான் நான் கேட்க முடியும்.
ஆனால் ஒரு முறை 2008ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் பிட்சில் உள்ள புற்களை முற்றிலும் மழிக்கச் சொன்ன போது நான் மறுத்து தைரியமாக இருந்தேன்.
ஏனென்றால், கடும் வெப்பம் இருப்பதால் பிட்ச் உடையாமல் இருக்க புற்கள் அவசியம் என்றேன். என்னுடைய கோட்பாடு என்னவெனில் பிட்ச் 5 நாட்களுக்குரியதாக இருக்க வேண்டும். பேட்ஸ்மென்களும், பவுலர்களும் தங்கள் திறமையைப் பயன்படுத்தி முடிவுகளை அவர்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ளட்டும் என்பதே' எனக் கூறினார்.