"இரண்டாவது முறையா இந்தியா 'டீம்'ல 'சான்ஸ்' கெடச்சுருக்கு... ஆனா அதுலயும் இப்போ ஒரு 'சிக்கல்'??..." 'தமிழக' வீரருக்கு வந்த 'சோதனை'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே தற்போது டெஸ்ட் தொடர் நடைபெற்று வரும் நிலையில், இதற்கு அடுத்தபடியாக 5 போட்டிகள் கொண்ட டி 20 தொடர் நடைபெறவுள்ளது.
இதற்கான இந்திய அணி, சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஐபிஎல் தொடரில் ஜொலித்த வீரர்கள் சிலரும் முதல் முறையாக சர்வதேச அணிக்காக ஆட தேர்வாகியுள்ளனர். முன்னதாக ஆஸ்திரேலிய தொடரில் இடம்பெற்றிருந்து காயம் காரணமாக விலகிய வருண் சக்ரவர்த்தி, இங்கிலாந்து டி 20 தொடரில் தேர்வாகியுள்ளார்.
ஆனால், இரண்டாவது முறையாக இந்திய அணிக்காக தேர்வாகியும், போட்டியில் ஆடுவதில் வருண் சக்கரவர்த்திக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. உடற்தகுதி தேர்வில் வருண் தேர்ச்சி பெறாததால், இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆடுவதில் கேள்விக்குறியாகியுள்ளது. கொரோனா தொற்றிக்கு பிறகு, இந்திய கிரிக்கெட் அணி உடற்தகுதி தேர்வுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.
அதன்படி, ஒரு வீரர் 2 கிலோ மீட்டர் தூரத்தை 8.5 நிமிடங்களில் ஓடி முடிக்க வேண்டும். அல்லது யோ யோ டெஸ்டில் 17.1 புள்ளிகள் பெற வேண்டும். இதில், இரண்டிலும் வருண் சக்ரவர்த்தி தேர்ச்சி பெறவில்லை என தெரிகிறது. இதன் காரணமாக, இவர் டி 20 தொடரில் இடம்பெறுவது சிக்கலில் உள்ளது.
அது மட்டுமில்லாமல், இவருக்கு பதிலாக மாற்று வீரர் விரைவில் அறிவிக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஐபிஎல் சீசனில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஆடிய வருண் சக்ரவர்த்தி, சுழற்பந்து வீச்சில் கலக்கியதால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.