"அஸ்வினும், அக்சரும் சேர்ந்தா மாஸு டா..." பிச்சு உதறிய 'சூழல்' காம்போ... ஆட்டம் கண்ட 'இங்கிலாந்து' அணி!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில், இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதிலும் குறிப்பாக, இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின் மற்றும் அக்சர் படேல் ஆகியோர், இங்கிலாந்து அணி வீரர்களை அதிகம் அச்சுறுத்தினர்.
இங்கிலாந்து அணியின் தொடக்க வீரரான ஜாக் க்ராவ்லி மட்டும் 53 ரன்கள் எடுத்து அவுட்டானார். மற்ற வீரர்கள் யாரும் பெரிய அளவில் ரன்களைக் குவிக்கவில்லை. இதனால், இங்கிலாந்து அணி 49 ஆவது ஓவரில் 112 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அக்சர் படேல் 6 விக்கெட்டுகளும், அஸ்வின் 3 விக்கெட்டுகளும் எடுத்தனர். அக்சர் படேல் அறிமுகமான தொடரிலேயே சிறப்பாக பந்து வீசி வருகிறார்.
முன்னதாக, இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தான் அக்சர் படேல் அறிமுகமாகி இருந்தார். அந்த போட்டியிலேயே ஐந்து விக்கெட்டுகளை எடுத்திருந்த அக்சர் படேல், தனது இரண்டாவது டெஸ்ட் போட்டியிலேயே 6 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார். சென்னை பிட்ச் இந்தியாவிற்கு சாதகமாக இருந்ததால் தான், இந்திய அணி வெற்றி பெற்றதாக பல பிட்ச்சை குறை கூறியிருந்தனர். ஆனால், அகமதாபாத்தில் உள்ள மைதானத்திலும் சுழல் ஜாலத்தால் இங்கிலாந்து அணி வீழ்ந்துள்ளது.
அது மட்டுமில்லாமல், பொதுவாக பகலிரவு போட்டிகளில் கடைசி செஷன் தான் பேட்ஸ்மேன்களுக்கு பாதகமாக அமையும். ஆனால், இன்று முதல் செஷனில் இருந்து இங்கிலாந்து அணி தடுமாறி விக்கெட்டுகளை பறி கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.