'சாதனை படைப்பாரா இந்திய வீரர்?'... ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Sangeetha | Jun 04, 2019 09:44 PM
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், ஓர் இன்னிங்சில் அதிக சிக்சர்கள் அடித்து, தனது சாதனையை, தானே இந்திய அணி வீரர் ரோகித் சர்மா முறியடிப்பாரா என்று ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து உள்ளனர்.

12-வது ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் மண்ணில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா போன்ற 10 நாடுகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இதனிடையே ரோஹித் ஷர்மா, ஏபிடி வில்லியர்ஸ் மற்றும் கிறிஸ் கெய்ல் ஆகிய மூன்று வீரர்கள் ஒருநாள் இன்னிங்ஸில் தலா 16 சிக்ஸர்களை அடித்து சாதனை படைத்துள்ளார்கள்.
அதாவது 2015 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரானப் போட்டியில், 16 சிக்சர்கள் பறக்கவிட்டதன் வாயிலாக, உலகக் கோப்பையில் ஓர் இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்த வீரர்கள் பட்டியலில் 3-ம் இடத்தில் உள்ளார் கிறிஸ் கெய்ல். இதேபோல் தென்னாப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் இன்னிங்சில் 16 சிக்சர்கள் அடித்து 2-ம் இடத்தில் உள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் இன்னிங்சில், ரோகித் சர்மா 16 சிக்சர்களை பொழிந்து உலக அளவில் முதலிடத்தில் உள்ளார். தற்போது வரை இவர்களின் சாதனையை யாரும் முறியடிக்கவில்லை. ஆனால் இங்கிலாந்தில் நடைபெறும் இந்த உலகக் கோப்பை தொடரில் பவுண்டரி சிறிதளவு அருகில் இருப்பதால் இந்த வருடம் முறியடிக்க வாய்ப்புகள் உண்டு.
அணியின் தொடக்க வீரர்களால் மட்டும் இந்த சாதனையை முறியடிக்க முடியும் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. நியூசிலாந்து வீரர் மார்டின் குப்தில், வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல், மற்றும் ரோகித் சர்மா இந்த சாதனையை முறியடித்து அதிக சிக்சர்கள் அடிப்பார்களா என்று ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து உள்ளனர்.
