'தென்னாப்பிரிக்காவுடன் பலப்பரீட்சை புரியும் நேரத்தில்' முக்கிய வீரருக்கு ஏற்பட்ட காயம்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Siva Sankar | Jun 02, 2019 12:58 PM
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சி ஆட்டத்தில் இருந்தபோது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு காயம் உண்டானதால் ரசிகர்களுக்கு படபடப்புத் தொற்றியுள்ளது.
கடந்த 30-ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்கிய உலகக் கோப்பையின் முதல் போட்டியில், இங்கிலாந்து- தென்னாப்பிரிக்க அணிகள் மோதிக்கொண்டன. இதில் இங்கிலாந்து அணி வென்றது. இதனைத் தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ்க்கும் பாகிஸ்தானுக்கும் நடந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி பெற்றது. அதன் பின்னட் நேற்று நடந்த 2 போட்டிகளில் இலங்கை-நியூஸிலாந்து அணிகளுக்கிடையேயான போட்டியில் நியூஸிலாந்து அணியும், ஆஸ்திரேலியா-ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியும் வெற்றி பெற்றன. தொடர்ந்து தென்னாப்பிரிக்கா மற்றும் பங்களாதேஷ் அணிகள் இன்று மோதுகின்றன.
இந்திய அணியைப் பொருத்தவரை, வரும் 5-ஆம் தேதி தென்னாப்பிரிக்க அணியை சவுதாம்டனில் எதிர்கொள்கிறது. இதற்கென இந்திய அணி பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த பயிற்சி ஆட்டத்தில் விராட் கோலியின் கைவிரல்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இந்திய அணியின் பிசியோதெரபிஸ்ட்டான பேட்ரிக், கோலியின் விரல்களுக்கு வலிநிவாரணி ஸ்பிரே அடித்துவிட்டார். அதன் பின்னர், ஒரு ஐஸ் டம்ளரில் விரல்களை வைத்துக்கொண்டபடி சென்ற புகைப்படம் இணையத்தில் வலம்வருகிறது.
உலகக் கோப்பை ஆட்டம் நெருங்கும் நேரத்தில் கோலிக்கு நடந்துள்ள இந்த காயம், ரசிகர்களை சற்றே துவண்டுபோகச் செய்தாலும், இது அத்தனை பெரிய காயம் இல்லை என்பதால், சற்று ஆறுதலடைந்துள்ளனர். ஆனால் கோலிக்கு இந்த காயம் எப்படி உண்டானது என்பது பற்றி ஐசிசி எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.