'இத எதிர்பார்க்கலல, மாஸ் காட்டிய வங்கதேசம்'... 'மிரண்ட தென்னாப்பிரிக்கா'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Jun 03, 2019 08:38 AM

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரானப் போட்டியில் வங்கதேசம் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிவாகை சூடியுள்ளது.

icc world cup 2019 bangladesh beats south africa by 21 runs

இங்கிலாந்து நாட்டில் 10 அணிகள் பங்கேற்றுள்ள உலகக் கோப்பைத் தொடர் நடைபெற்றுவருகிறது. ஞாயிறன்று லண்டனிலுள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்ற ஐந்தாவது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியும், வங்கதேசம் அணியும் மோதின. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது.

இதையடுத்து, வங்கதேச அணி களமிறங்கியது. அந்த அணியின் தமிம் இக்பால் 16 ரன்னிலும், சவுமியா சர்க்கார் 42 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து இறங்கிய ஷகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹிம் ஜோடி நிலைத்து நின்று ஆடி 142 ரன்களை சேர்த்தது. ஷகிப் அல் ஹசன் 75 ரன்னிலும், மொகமது மிதுன் 21 ரன்னிலும், முஷ்பிகுர் ரஹிம் 78 ரன்னிலும் அவுட்டானார். இறுதியில், வங்கதேசம் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 330 ரன்களை எடுத்துள்ளது.

மகமதுல்லா 46 ரன்னுடன் அவுட்டாகாமல் இருந்தார். தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் பெலுக்வாயோ, கிறீஸ் மாரிஸ், இம்ரான் தாஹிர் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதன்பின்னர், 331 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி களம் இறங்கியது. குயிண்டன் டி காக் 23 ரன்னிலும், மார்கிராம் 45 ரன்னிலும், டேவிட் மில்லர் 38 ரன்னிலும், வான்டெர் துஸ்சென் 41 ரன்னிலும், பெலுக்வாயோ 8 ரன்னிலும், கிறிஸ் மாரிஸ் 10 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

கேப்டன் டு பிளசிஸ் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடி அரை சதமடித்தார். அவர் 62 ரன்னில் அவுட்டானார். டுமினி அணியின் வெற்றிக்காக போராடினார். ஆனால் அவரையும் 45 ரன்னில் வெளியேற்றினர். இறுதியாக, தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 309 ரன்களை எடுத்தது.

இதையடுத்து வங்காளதேசம் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வங்கதேசம் சார்பில் முஸ்தபிசுர் ரகுமான் 3 விக்கெட்டும், மொகமது சபுதின் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். வங்க தேசம் வெற்றியுடன் உலகக் கோப்பைத் தொடரைத் தொடங்கியுள்ளது. தென் ஆப்பிரிக்கா அணி, தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் தோல்வியைச் சந்தித்துள்ளது.