'இந்தியா, பாகிஸ்தான் போட்டிக்கும் சிக்கல்?'... கடுப்பான ரசிகர்கள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Sangeetha | Jun 14, 2019 03:07 PM
இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளப் போட்டியிலும், மழை வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதால், அந்தப் போட்டியும் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

உலகக் கோப்பை தொடர், இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்று வருகிறது. அங்கு தற்போது பருவநிலைக்கு மாறாக மழை பெய்துக் கொண்டிருக்கிறது. இதனால் மிகவும் பரபரப்பாக காணப்பட வேண்டிய லீக் போட்டிகள், அதற்கு மாறாக நடைபெற்று வருகின்றது. அங்கு பெய்துவரும் மழையால், இதுவரை 4 போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மழை காரணமாக இலங்கை - வங்கதேசம், இலங்கை - பாகிஸ்தான் அணிகள் டாஸ் போடாமலேயே ரத்து செய்யப்பட்டது. வெஸ்ட் இண்டீஸ் - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய போட்டியில், 7.3 ஓவர்கள் பந்து வீசப்பட்ட நிலையில் ரத்து செய்யப்பட்டது. இதேபோன்று மழையால் டாஸ் கூட போடாமலேயே, இந்தியா - நியூசிலாந்து போட்டியும் கடந்த வியாழக்கிழமையன்று தடைப்பட்டது.
இந்நிலையில் மான்செஸ்டரில் ஓல்டு ட்ராஃபோர்டு மைதானத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமையன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியும் மழையால் ரத்தாவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரியவந்துள்ளது. போட்டி நடைபெறும் நாளன்று, ஆட்டம் துவங்க உள்ள நேரத்தில் மழை பெய்ய 50 சதவிகிதம் வரை வாய்ப்பு உண்டு என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் போட்டிகள் துவங்கினாலும், பாதியிலேயே நிறுத்தப்பட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இது ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
