இரு சீனியர்களுக்கு 'நடுவில்' சிக்கித்தவிக்கும் 'சின்னப்பையன்'... அடுத்தடுத்து 'செக்' வைக்கும் இந்திய அணி... என்ன காரணம்?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Feb 05, 2020 12:59 AM

இந்திய அணியின் அடுத்த தோனியாக உருவாகி வந்த இளம்வீரர் ரிஷப் பண்டுக்கு, தொடர்ந்து இந்திய அணி செக் வைத்து வருகிறது. கடைசியாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஆடிய பண்ட், காயம் காரணமாக அடுத்த 2 போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. இதனால் கே.எல்.ராகுலை விக்கெட் கீப்பராக களமிறக்கி சமாளிக்க வேண்டிய நிலை கோலிக்கு ஏற்பட்டது.

IND Vs NZ: Kohli confirms Prithvi Shaw\'s place in ODI

எனினும் அந்த இக்கட்டான சூழ்நிலையை ராகுல் நன்றாக சமாளித்ததால் தொடர்ந்து நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடர் முழுவதும் பண்டை, கோலி மைதானத்துக்கு வெளியிலேயே அமரவைத்து விட்டார். இந்த நிலையில் நேற்று பிசிசிஐ டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியை அறிவித்தது. ஒருநாள் தொடரில் கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட் என 2 விக்கெட் கீப்பர்கள் இருக்கின்றனர்.

அதேபோல டெஸ்ட் தொடரில் விருத்திமான் சஹா விக்கெட் கீப்பராக இருக்கிறார். இதனால் ரிஷப் பண்டுக்கு ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் வாய்ப்பு கிடைக்குமா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. ஒருநாள் தொடரில் பிரித்வி ஷாவுடன் இணைந்து மயங்க் அகர்வால் களமிறங்குவார் என கூறப்படுகிறது. ராகுல் மிடில் ஆர்டரில் இறங்கவிருக்கிறார். ராகுலுக்கு நிச்சயம் வாய்ப்பு இருப்பதால் பண்டுக்கு வாய்ப்பு கிடைப்பது சிரமம் தான்.

டெஸ்ட் தொடரில் ராகுல் இல்லாவிடினும், விருத்திமான் சஹா இருக்கிறார். இதனால் அங்கும் பண்டுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று தோன்றவில்லை. 5 டி20 தொடர்களிலும் தொடர்ந்து களமிறங்கிய மணீஷ் பாண்டே எந்த போட்டியிலும் அவுட் ஆகாமல் தன்னுடைய முழு பங்களிப்பை வழங்கி இருக்கிறார் என்பதால் அவரை விடுத்து ரிஷப்புக்கு வாய்ப்பு கிடைப்பது கடினமான ஒன்றாக இருக்கிறது. எது எப்படியாகினும் நியூசிலாந்து தொடரில் பண்டுக்கு வாய்ப்பு கிடைப்பது குதிரைக்கொம்பு தான்.

இதனால் வரும் காலங்களில் இந்திய அணியில் ரிஷப்புக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்ற கேள்வி தற்போதே ரசிகர்கள், கிரிக்கெட் விமர்சகர்கள் மத்தியில் எழ ஆரம்பித்துள்ளது. ஒருவேளை வாய்ப்பு தொடர்ந்து கிடைக்கவில்லை என்றால் ஐபிஎல் போட்டிகளில் தன்னை நிரூபித்தே அவர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப நேரிடும்.