'நியூசிலாந்து தொடரில் சொதப்பல்'... 'மோசமான சாதனையால்'... 'தரவரிசையில் சறுக்கிய சீனியர் வீரர்'... 'முதலிடத்தை காப்பாற்றிக் கொண்ட கேப்டன்'!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடி20 போட்டிகளில் 5-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்தது இந்திய அணி. இதனையடுத்து நடைபெற்ற ஒருநாள் தொடரில் 3-0 என்ற கணக்கில் இந்திய அணியை ஒயிட்வாஷ் செய்து பழி தீர்த்துக்கொண்டது நியூசிலாது அணி. ஒருநாள் தொடரில் மற்ற அணிகளை மிரட்டி வந்த இந்திய அணி வீரர்களுக்கு, இந்த தோல்வி படுபாதகமாகி, ஐசிசி வெளியிட்டுள்ள சமீபத்திய தரவரிசைப்பட்டியலிலும் எதிரொலித்துள்ளது.
பேட்டிங்கில் கேப்டன் விராட் கோலிக்கு இந்த தொடர் மோசமாக மாறியதால், அதாவது 3 போட்டிகளிலும் சேர்த்தே 75 ரன்கள் மட்டுமே எடுத்ததால், போட்டிக்கு முன்னதாக 886 புள்ளிகளுடன் இருந்த விராட் கோலி, 17 புள்ளிகளை இழந்து 869 புள்ளிகளைப் பெற்றுள்ளார். எனினும், முந்தைய தொடர்களில் செய்த சிறப்பான பெர்பார்மன்ஸால் முதலிடத்தை தக்க வைத்துக்கொண்டார். ரோகித் சர்மா காயம் காரணமாக இத்தொடரில் பங்கேற்காததால் 13 புள்ளிகளை இழந்து 855 புள்ளிகளைப் பெற்று 2-வது இடத்தில் உள்ளார்.
இதேபோல் பந்துவீச்சைப் பொறுத்தவரை டாப் டென்னில் இருக்கும் ஒரே இந்திய வீரர் பும்ரா தான். காயத்திலிருந்து திரும்பி, டி20 போட்டிகளில் மாஸ் காட்டிய பும்ராவிற்கு, ஒருநாள் போட்டி சோதனையாகியது. 3 போட்டிகளில் விளையாடி ஒரு விக்கெட்டை கூட எடுக்காததால் 45 புள்ளிகளை இழந்து, கடந்த 2018 முதல் தரவரிசைப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த பும்ரா, இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார்.
நியூசிலாந்து தொடரில் பும்ரா விளையாடாமல் இருந்திருந்தால் 11 புள்ளிகளை மட்டும் இழந்து 1வது இடத்தை தக்கவைத்திருப்பார். பும்ராவின் சொதப்பலான பவுலிங்கால், போட்டிகளில் விளையாடமலேயே முதலிடத்தைப் பிடித்திருக்கிறார் போல்ட் என்பதும், கடந்த பிப்ரவரி 2018ம் ஆண்டுக்குப் பின் பவுலிங் தரவரிசைப்பட்டியலில் முதலிடத்தை பும்ரா இழப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஒருநாள் தொடரில் பலனடைந்தது கே.எல்.ராகுலும், ஸ்ரேயாஸ் ஐயரும் தான். நியூசிலாந்து தொடருக்கு முன் தரவரிசைப்பட்டியலில் 49-வது இடத்திலிருந்த ராகுல், இத்தொடருக்குப் பின் 36-வது இடத்திற்கு முன்னேறியிருக்கிறார். 85-வது இடத்திலிருந்த ஸ்ரேயாஸ் ஐயர் 62-வது இடத்திற்கு முன்னேறியிருக்கிறார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு, ஒருநாள் போட்டிகளில் விளையாடாத தோனி தரவரிசைப்பட்டியலில் 25-வது இடத்தை பிடித்திருக்கிறார். நியூசிலாந்து வீரர்கள் டெய்லர் போன்றோர் முன்னேறியுள்ளனர்.