யாருக்கும் தெரியாம... 'சம்பளத்தோட' லீவ் தர்றோம்... தயவுசெஞ்சு இந்த 'பக்கம்' வந்துராதீங்க!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manjula | Feb 12, 2020 04:48 PM

சீனாவில் உருவாகியுள்ள கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் உள்ள மக்களை ஆட்டிப்படைத்து வருகிறது. இதனால் மக்கள் ஒருவித அச்சத்துடனேயே இருந்து வருகின்றனர். இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால் சாதாரண சளி, காய்ச்சல் வந்தாலும் தங்களுக்கு கொரோனா இருக்குமோ? என்று மருத்துவ பரிசோதனை செய்துகொள்ளவும் மக்கள் தயங்குவதில்லை.

Singapore declares Orange Alert over Coronavirus outbreak

இந்த நிலையில் சீனாவில் இருந்து தங்களது நாட்டு மக்களுக்கு கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்து இருப்பதால் சிங்கப்பூர் அரசு அந்நாட்டு மக்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது. இதுகுறித்து சுகாதார அமைச்சகம் பல்வேறு அறிவுரைகளை மக்களுக்கு வழங்கி, ஏகப்பட்ட விதிமுறைகளையும் வெளியிட்டு இருக்கிறது.

குறிப்பாக கொரோனா வைரஸால் தாக்கப்பட்டவர்களோடு தொடர்புடையவர்களுக்குச் சுகாதார அமைச்சகம் தகவல் அனுப்பும். தகவல் பெறப்பட்டவர்கள், உடனடியாக மாஸ்க் அணிய வேண்டும். சுகாதார அமைச்சகத்திலிருந்து தனக்கு வந்துள்ள தகவல் குறித்து, அலுவலகத்தில் வேறு யாருக்கும் தெரியாதபடி, மனிதவள அலுவலரிடம் மட்டும் தெரியப்படுத்த வேண்டும். பின்னர், தனது தொடர்பு முகவரி விவரங்களை அளித்துவிட்டு சம்பளத்துடன் கூடிய விடுப்பில் செல்ல வேண்டும்.

வீட்டில் தனிமையில் இருந்து மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். பரிசோதனைக்குப்பின் அவர்களுக்கு கொரோனா இல்லையென்று தெரிய வந்தால் சுகாதார அமைச்சகத்திடம் அதுகுறித்து தெரிவித்த பின்னர். அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதேபோல பள்ளி மாணவர்களுக்கு பிரேயர் கூட்டங்கள் நடத்த வேண்டாம் என்றும், சிறிய உடல்நலக்குறைவு ஏற்பட்டாலும் அவர்கள் பள்ளிக்கு வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். சிங்கப்பூரில் இதுவரை 43 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது.