‘பிரதமர் மோடி, ரஜினியை தொடர்ந்து’... ‘MAN VS WILD’ நிகழ்ச்சியில் பங்கேற்கும்... ‘பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்’!
முகப்பு > செய்திகள் > லைப்ஸ்டைல்டிஸ்கவரி டெலிவிஷன் சேனலில் ஒளிபரப்பாகும் பிரபலமான 'மேன் வெர்சஸ் வைல்டு' (Man vs Wild) நிகழ்ச்சியில் இந்தியாவைச் சேர்ந்த கிரிக்கெட் பிரபலம் ஒருவர் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் ராணுவ அதிகாரியும் தொலைக்காட்சிப் பிரபலமுமான பிரிட்டனைச் சேர்ந்த பேர் கிரில்ஸ் (Bear Grylls) என்பவர், டிஸ்கவரி டெலிவிஷன் சேனலில் ஒளிபரப்பாகும் பிரபலமான 'மேன் வெர்சஸ் வைல்டு' நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். மனிதர்களுக்குச் சவால் விடுக்கும் இயற்கைச் சூழல்களைக் கையாள்வதுதான் 'மேன் வெர்சஸ் வைல்டு' நிகழ்ச்சியின் கருப்பொருள். இந்த நிகழ்ச்சியில் கடந்தாண்டு பிரதமர் மோடி பங்கேற்றார். இதையடுத்து 'மேன் வெர்சஸ் வைல்டு' நிகழ்ச்சி இந்தியாவில் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.
அதன்பின்னர் இந்தியாவின் முக்கிய பிரபலங்களுக்கு 'மேன் வெர்சஸ் வைல்டு' நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி, மோடியை அடுத்து பேர் கிரில்ஸின் 'மேன் வெர்சஸ் வைல்டு' நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றார். கர்நாடகாவின் பந்திபுரா புலிகள் காப்பகத்தில் இந்த நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு நடைபெற்றது. ரஜினிகாந்தை அடுத்து பாலிவுட் பிரபலம் அக்ஷய் குமார், ‘மேன் வெர்சஸ் வைல்டு' நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதற்கான புகைப்படங்களும் இணையத்தில் வெளியானது.
இவர்களை அடுத்து பாலிவுட் பிரபல நடிகை தீபிகா படுகோனே ‘மேன் வெர்சஸ் வைல்டு' நிகழ்ச்சியில் பங்கேற்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. தீபிகா பங்கேற்றால் இந்தியா சார்பில் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறும் முதல் பெண் தீபிகா படுகோனே ஆவார். அதற்குப் பின்னர், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சர்வதேச அளிவில் சாதித்து வருவது மட்டுமின்றி, ஏராளமான ரசிகர்களை கொண்ட விராட் கோலி, தற்போது நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் உள்ளார். நியூசிலாந்து சுற்றுப்பயணம் மார்ச் ஆரம்பத்தில் முடிவடைகிறது. அதன்பின் அவர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது.