எங்களுக்கு அது ராசியாவே இல்ல... உண்மையை உடைத்து கூறிய கேப்டன்... ‘சோகத்திலும் விராட் கோலியை மிஞ்சி புதிய சாதனை’!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியாவுக்கு எதிராக முதன்முறையாக சொந்த மண்ணில் டி20 தொடரை இழந்த நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், சூப்பர் ஓவர் குறித்து விரக்தியுடன் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில், நியூசிலாந்து அணி இறுதி வரை போராடி, கடைசியில் சூப்பர் ஓவரில் பவுண்டரிகளின் அடிப்படையில் உலகக் கோப்பையை இங்கிலாந்திடம் பறிகொடுத்தது. இந்நிலையில் இன்று ஹாமில்டன் மைதானத்தில் நடைபெற்ற 3-வது டி20-யில் இந்திய அணி சூப்பர் ஓவரில் வெற்றிபெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது.
இதுகுறித்து கேன் வில்லியம்சன் கூறுகையில், ‘சூப்பர் ஓவர்ஸ் உண்மையில் எங்கள் நண்பர்கள் அல்ல. உண்மையைச் சொன்னால், சூப்பர் ஓவருக்கு முன்பே நாங்கள் வெற்றிபெற நினைத்தோம். ஆனால் எங்களால் முடியவில்லை. இது ரொம்ப வெட்கக் கேடானது. இந்தப் போட்டியில் இந்திய அணி சிறப்பாக ஆரம்பித்த போதும், எங்களது பவுலர்கள் சிறப்பாக பந்துவீசி போட்டியை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இப்படி போராடி தோல்வி அடையும் போது வருத்தமாக உள்ளது. மேலும் இவ்வளவு முயற்சி செய்து வெற்றிக்கு அருகில் சென்றும் அதனை கடக்கவில்லையே என்ற வருத்தம் என்னை வாட்டுகிறது. கடைசி மூன்று பந்துகளில், இந்தியாவின் அனுபவத்தை நாங்கள் பார்த்தோம். அவர்களிடம் இருந்து கட்டாயம் கற்றுக் கொள்ள வேண்டும்’ என்றார்.
இந்நிலையில், தனி ஒரு ஆளாக போராடிய கேன் வில்லியம்சன், ஒரு புதிய சாதனை படைத்துள்ளார். அதாவது, 48 பந்துகளில் 95 ரன்களை எடுத்து அரை சதம் கடந்ததன் மூலம், இருபது ஓவர் போட்டிகளில் அதிக முறை ஐம்பது ரன்களை கடந்த கேப்டன் என்ற பெயரைப் பெற்றுள்ளார். இதற்கு முன் இந்த பட்டத்திற்கு இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி (36 போட்டிகளில், 8 அரைச்சதம்) மற்றும் தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் டூ பிளஸிஸ் (40 போட்டிகளில், 7 அரைச்சதம்) இருவரும் சொந்தக்காரர்களாக இருந்தனர்.
