"சிக்ஸர் மழையால்!"... "சூப்பர் ஓவரில்"... "இந்தியா த்ரில் வெற்றி!!"... "தொடரையும் கைப்பற்றியது"...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநியூசிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி. 3-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றது.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளை இந்திய அணி வெற்றி பெற்று, தொடரில் முன்னிலை பெற்று வந்தது.
இந்நிலையில், ஹாமில்டனில் இன்று நடந்த 3வது டி20 போட்டியில், இந்திய அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்று, ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது.
இன்றைய போட்டியில், முதலாவதாக பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர் முடிவில், 5 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்திருந்தது. அதில், அதிகபட்சமாக ரோஹித் சர்மா 65 ரன்கள் எடுத்திருந்தார்.
அதன் பின், 180 ரன்களை இலக்காகக் கொண்டு, இரண்டாவதாக பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, மிகுந்த பரபரப்பிற்கு இடையே 20 ஓவர் முடிவில் 179 ரன்கள் எடுத்து இந்திய அணியின் ஸ்கோரை சமன் செய்தது.
இரு அணிகளும் ஒரே ஸ்கோரை அடித்ததால், சூப்பர் ஓவர் அறிவிக்கப்பட்டது. சூப்பர் ஓவரில் முதலாவதாக களமிறங்கிய நியூசிலாந்து அணி, அந்த ஓவரின் முடிவில் 17 ரன்களை அடித்து இந்திய ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.
இந்திய அணியின் சார்பில், ரோஹித் சர்மாவும், கே.எல். ராகுலும், சூப்பர் ஓவரை எதிர்கொண்டனர். விறுவிறுப்பாக நகர்ந்த அந்த ஓவரில், இந்திய அணி 20 ரன்களை அடித்து, இந்திய ரசிகர்களை ஆனந்தக்களிப்பில் திக்குமுக்காடச் செய்தது. மேலும், 2 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்டபோது, அடுத்தடுத்து 2 சிக்ஸர்களை ரோஹித் பறக்கவிட்டு அசத்தினார்.
இந்த வெற்றியின் மூலம், நியூசிலாந்திற்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி வென்றுள்ளது. நியூசிலாந்தில் ஒரு டி20 தொடரை இந்தியா கைப்பற்றுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.