'அவரோட' விக்கெட் தானே வெற்றிக்கு காரணம்... அப்புறம் ஏன்? 'சூப்பர்' ஓவரை 'இவருக்கு' கொடுத்தீங்க?... 'ரகசியத்தை' உடைத்த துணை கேப்டன்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநேற்று நடைபெற்ற 3-வது டி20 போட்டியில் இந்திய அணி சூப்பர் ஓவரில் சூப்பரான வெற்றி பெற்று டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த வெற்றியின் வழியாக நியூசிலாந்து நாட்டில் டி20 தொடரை வென்ற முதல் இந்திய கேப்டன் என்னும் பெருமை கோலிக்கு கிடைத்துள்ளது.
அதோடு டி20 போட்டியில் 10 ஆயிரம் ரன்களை அதிவேகமாக கடந்த ஓபனிங் பேட்ஸ்மேன் என்ற பெருமை துணை கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு கிடைத்திருக்கிறது. சூப்பர் ஓவரில் சூப்பராக 2 சிக்ஸர்கள் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு ரோஹித் சர்மா உறுதுணையாக இருந்தார். இந்த நிலையில் போட்டிக்குப்பின் ரோஹித் சர்மா அளித்த பேட்டியில் சூப்பர் ஓவரில் பும்ராவுக்கு ஏன் வாய்ப்பு வழங்கப்பட்டது? என்ற ரகசியத்தை தெரிவித்து இருக்கிறார்.
இதுகுறித்து அவர், '' சூப்பர் ஓவருக்கு என்று தனியாக எந்தவொரு திட்டமும் இல்லை. ஷமி மற்றும் ஜடேஜாவுக்கு அந்த வாய்ப்பினை வழங்கலாமா? என்றும் யோசித்தோம். ஆனால் கொஞ்சம் குழப்பமாக இருந்தது. யார்க்கர் மற்றும் மெதுவாக பந்து வீசுவதில் பும்ரா சிறந்தவர் என்பதால் அவருக்கு சூப்பர் ஓவர் வாய்ப்பு வழங்கப்பட்டது,'' என்றார். நேற்றைய போட்டியின் போது கடைசி ஓவரில் 9 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் நியூசிலாந்து அணி இருந்தது.
ஆனால் கடைசி ஓவரை வீசிய ஷமி கனே வில்லியம்சன், ராஸ் டெய்லர் இருவரின் விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன் 8 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். இதனால் தான் மேட்ச் டிராவில் முடிந்து சூப்பர் ஓவருக்கு சென்றது. அந்த வகையில் இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தவர் ஷமி என்று சொன்னால் அது மிகையாகாது. வெற்றிக்கு ஷமி எடுத்த 2 விக்கெட்டுகள் தான் முக்கிய காரணம் என்று ஆட்ட நாயகன் விருதை வென்ற ரோஹித் சர்மாவும் வெளிப்படையாக பாராட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.