60 வயது தாயை மாடல் ஆக்கிய ஃபேஷன் டிசைனர்... பாராட்டும் ஹாலிவுட் பிரபலம்..!
முகப்பு > செய்திகள் > லைப்ஸ்டைல்ஃபேஷன் டிசைனர் ஒருவர் இளம் மாடல்களை தனது அடையாளமாகப் பயன்படுத்தாமல் தன்னுடைய 60 வயது தாயை மாடல் ஆக்கி அழகு பார்த்துள்ளார்.
ஃபேஷன் டிசைனர்களைப் பொறுத்த வரையில் அவர்கள் எந்தளவுக்கு தாங்கள் உருவாக்கும் உடைகளை மீது கவனம் செலுத்துகிறார்களோ அதே அளவுக்கு அதை அணிந்து காட்டும் மாடல்கள் மீது கவனம் செலுத்துவார்கள். காரணம், சரியான ஒரு மாடலைத் தேர்ந்தெடுத்தால் மட்டுமே அவர்களின் டிசைன் தனித்துவமானதாகத் தெரியும்.
ஆனால், உலகம் மேற்கூறியவாறு சொல்லிக் கொண்டிருக்க அப்படியெல்லாம் இல்லை என மாற்றிக் காண்பித்து இருக்கிறார் டிராவிஸ் டி’மீர். தன்னுடைய டிசைனர் உடைகளை அணிந்து காட்சிப்படுத்த 20 வயது இளம் மாடல்களை பல்லாயிரம் டாலர்கள் செலவு செய்து நியமிக்கவில்லை டிராவிஸ். மாறாக, தனது டிசைனர் ஆடைகளை உடுத்தி எடுப்பாக வலம் வர தனது 60 வயது தாயை மாடல் ஆக அறிமுகம் செய்துள்ளார் டிராவிஸ்.
IEMBE என்னும் ஃபேஷன் லேபிள் நிறுவனர் ஆக டிராவிஸ் இருக்கிறார். தனது 60 வயது தாய்க்கு டிசைனர் உடைகளை அணிவித்து அசத்தலாக போஸ் கொடுக்கச் சொல்லி போட்டோ ஷூட் நடத்தி உள்ளார். டிராவிஸ் டிசைன் செய்த படு அசத்தலான உடைகளை அந்த 60 வயது தாய் அணிந்து கொண்டு ஒய்யாரமாக போஸ் கொடுத்துள்ளார்.
கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வரும் வேளையில் அசத்தலான இசைக்கு துள்ளல் நடையில் ஒய்யாரமாக டிசைனர் உடையில் உலா வரும் அந்தத் தாயின் வீடியோ தற்போது சமுக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அந்தத் தாயும் இசைக்கு ஏற்ற நடை அசைவுகளை வெளிப்படுத்தி வருகிறார். டிராவிஸ் தனது அம்மாவின் இந்த மாடலிங் வீடியோவை ‘கார்டி பி’ ஸ்டைல் என அமெரிக்க பிரபல பாடகி கார்டி பி-யை டேக் செய்து வெளியிட்டுள்ளார்.
அதற்கு பிரபல பாடகியும் ஹாலிவுட் நடிகையுமான கார்டி பி, “வாவ் நான் எனக்கு மரியாதை செலுத்தப்பட்டதாக உணர்கிறேன்” எனக் குறிப்பிட்டு மாடலிங் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.