என்ன ஒரு வில்லத்தனம்!.. பேட்டை வாள் மாதிரி சுழற்றுவது ஏன்?.. ஒண்டிக்கு ஒண்டி சண்டையிட ரெடியான ஜடேஜா!.. மாஸ் சம்பவம்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுரவீந்திர ஜடேஜா அரைசதம் அடித்த பிறகு எதற்காக பேட்டை சுழற்றுகிறார் என்ற ரகசியம் தெரியவந்துள்ளது.
இந்திய அணி அடுத்ததாக நியூசிலாந்து அணிக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்காக இங்கிலாந்து செல்கிறது. இதற்காக வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்த தொடர் குறித்து எடுக்கப்பட்ட பேட்டியில் ரவீந்திர ஜடேஜா தனக்கும் சஞ்சய் மஞ்ச்ரேக்கருக்கும் இடையே நடந்த பிரச்சினையை நினைவுக்கூர்ந்துள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டு உலகக்கோப்பையின் போது ஜடேஜாவுக்கும், முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது. அதற்கு காரணம் அந்த தொடரின் போது வர்ணனையாளாராக இருந்த மஞ்ச்ரேக்கர், ஜடேஜா ஒரு முழுமையான கிரிக்கெட் வீரர் இல்லை என்பது போல் கருத்து தெரிவித்திருந்தார். இது ஜடேஜாவை மிகுந்த கோபத்துக்கு உள்ளாக்கியது.
அந்த தொடரின் அரையிறுதிப்போட்டியின் போது நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்தியா திணறி வந்தது. அப்போது ஜடேஜா சரியான நேரத்தில் சிறப்பாக பேட்டிங் செய்து இந்திய அணியை வெற்றிக்கு சற்று அருகில் வரை கொண்டு சென்றார். 59 பந்துகளை சந்தித்த ஜடேஜா 77 ரன்களை விளாசினார். இதனை கண்டு நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் திகைத்துப்போனார்கள். அப்போது அரை சதம் அடித்த பிறகு அவர் தனது பேட்டை உயர்த்தி, வாளை சுழற்றுவது போன்று சுழற்றினார்.
இந்நிலையில், இதுகுறித்து தற்போது பேசியுள்ள ஜடேஜா, "நான் அரைசதம் அடித்தவுடன் கமெண்ட்ரி பாக்ஸில் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் உள்ளாரா என தேடினேன். ஆனால், அவர் அங்கு இல்லை. அவரை குறிவைத்து தான் நான் பேட்டை சுழற்றி கொண்டாடினேன். இது அங்கிருந்த பலருக்கும் தெரிந்திருக்கும்" எனக் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய ஜடேஜா, "2018ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் போட்டி எனது ஆட்டத்தை முற்றிலுமாக மாற்றியது. இங்கிலாந்து போன்ற களத்தில் சிறந்த பவுலர்களுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டது, உலகில் எங்கு வேண்டுமானாலும் இனி விளையாடலாம் என்ற நம்பிக்கையை கொடுத்தது. அதன் பிறகு தான் எனது ஆட்டம் ஒருநாள் போட்டிகளிலும் சிறப்பானது" என்று தெரிவித்துள்ளார்.