தஞ்சை பெரிய கோயில் கருவறையில்... ஓங்கி ஒலித்த 'தெய்வத் தமிழ்!'... 1035-ம் ஆண்டு ஐப்பசி சதய விழா!.. இந்த ஆண்டு மட்டும் ரொம்ப விசேஷம்!.. ஏன் தெரியுமா?
முகப்பு > செய்திகள் > தமிழகம்சோழப் பேரரசன் ராஜராஜசோழன் பிறந்த ஐப்பசி சதய நட்சத்திரத்தையொட்டி தஞ்சை பெரிய கோயிலில் பெருவுடையாருக்கு, முதன்முதலில் தெய்வத்தமிழில் பூஜை செய்யப்பட்டும் பேராபிஷேகம் நடைபெற்றது. குஜராத்திலிருந்து மீட்டுக் கொண்டுவரப்பட்ட ராஜராஜன் - உலகமாதேவி சிலைகளுக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

அருண்மொழி வர்மன் என்று அழைக்கப்படும் ராஜராஜ சோழன், சோழ நாட்டை ஆட்சி செலுத்திய மன்னர்களுள் தலைசிறந்தவனாவான். கி.பி 947-ம் ஆண்டு தஞ்சாவூரில், ஐப்பசி சதய நட்சத்திரத்தில் பிறந்து, கி.பி 985 முதல் கி.பி 1014 வரை தஞ்சையைத் தலைநகராகக்கொண்டு சோழ நாட்டை ஆட்சி செலுத்தினான்.
ராஜராஜன் ஆட்சி செலுத்திய காலம் 'சோழ மரபினரின் பொற்காலம்' என்று வரலாற்று ஆசிரியர்களால் போற்றப்படுகிறது.
அந்த அளவுக்கு நிலச் சீர்திருத்தம், கட்டுமானம், கலை, போர், ஆட்சித் திறம், இலக்கியம், சமயம், வணிகம் என்று அனைத்து துறைகளிலும் தன் முத்திரையைப் பதித்தான் ராஜராஜன்.
அதனாலேயே ராஜராஜன் 'த கிரேட் ராஜராஜன்' என்று அழைக்கப்படுகிறான். ராஜராஜனின் ஆட்சித் திறத்துக்குச் சான்றாகத் தஞ்சை பெருவுடையார் கோயில் இன்றளவும் வானளாவ உயர்ந்து விளங்குகிறது.
ராஜராஜ சோழன் பிறந்த ஐப்பசி சதயத் திருநாள் ஒவ்வொரு ஆண்டும் தஞ்சை பெரியகோயிலில் சீரும் சிறப்புமாகக் கொண்டாடப்படுவதுண்டு. இந்த ஆண்டு, 1035 - ம் ஆண்டு சதயத் திருவிழா, கொரோனா பரவல் காரணமாக ஒரு நாள் திருவிழாவாக மட்டும் கொண்டாடப்படுகிறது.
இதையடுத்து தஞ்சை பெரிய கோயிலில் தெய்வத் தமிழில் பூஜை செய்யப்பட்டு பேராபிஷேகம் நடைபெற்றது. மேலும், பெருவுடையாருக்கு முன்பு ராஜராஜன் - உலகமாதேவி சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
இந்த சிலைகள், ராஜராஜனின் ஆட்சிக்காலத்தில் பொய்கை நாடு கிழவன் ஆதித்தன் சூரியனாகிய தென்னவன் மூவேந்தன் வேளாண் என்பவரால் எடுப்பிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
மூலவர் சந்நிதியில் ஓதுவார்களால் தேவரத் திருமுறை பாடப்பட்டு பைந்தமிழில் பூஜை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, தர்மபுர ஆதீனம் கட்டளை சொக்கலிங்க தம்பிரான் தலைமையில், பெருவுடையாருக்கு மூலிகை, பால், மஞ்சள், சந்தனம், திரவிய பொடி, கரும்புச் சாறு, விபூதி, தயிர் மற்றும் பழங்கள் உள்ளிட்ட 48 மங்கலப் பொருட்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
1035 - ம் ஆண்டு சதய விழாவை முன்னிட்டு ராஜராஜ சோழன் சிலைக்கு அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மற்ற செய்திகள்
