‘இரண்டாம் உலகப் போரையே பார்த்தாச்சு’... ‘கொரோனா எல்லாம் நமக்கு’... ‘மீண்டு வந்து’... ‘104-வது பர்த்டே கொண்டாடிய முன்னாள் ராணுவ வீரர்’!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் அமெரிக்காவை வாட்டி வதைத்து வரும் நிலையில், 104 வயதான இரண்டாம் உலகப்போர் முன்னாள் ராணுவ வீரர், கொரோனாவிலிருந்து குணமடைந்து மீண்டுள்ள சம்பவம் உலக கவனத்தை திரும்பி பார்க்க வைத்துள்ளது.

அமெரிக்காவின் ஓர்கான் மாகாணத்தின் லிபனோன் நகரைச் சேர்ந்த வில்லியம் லாப்சீஸ் (104). இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற முன்னாள் ராணுவ வீரரான இவருக்கு கடந்த மார்ச் 5-ம் தேதி கடும் காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது கொரோனா தொற்று உறுதியானது.
இதன் பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு உடல்நிலையில் சில நேரங்களில் தொய்வும், சில நேரங்களில் முன்னேற்றமும் என மாறி மாறி வந்த நிலையில் இறுதியாக ஏப்ரல் 1ம் தேதி அவரின் 104-வது பிறந்த நாளுக்கு முன்னதாக அவர் கொரோனாவை வீழ்த்தி குணமடைந்து வீடு திரும்பியிருக்கிறார். அதுமட்டுமல்லாது கேக், தனக்கு பிடித்தமான பீஸா என தனது பிறந்த நாளையும் உற்சாகமாக கொண்டாடிதுடன், நான் வென்று விட்டேன் என்றார் வில்லியம்.
ஏப்ரல் 1 1916-ம் ஆண்டு ஓர்கான் மாகாணத்தில் பிறந்த வில்லியம்-க்கு, 1939-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அவருக்கு இரண்டு மகள்களும், 6 பேரப்பிள்ளைகளும், 14 கொள்ளுப் பேரப்பிள்ளைகளும் உள்ளனர். தள்ளாத வயதிலும் மனோதிடத்துடன் கொரோனாவிலிருந்து மீண்ட, வில்லியம் போன்ற மூத்தவர்கள் கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தின் நடுவே இருக்கும் பல கோடி மக்களுக்கு உந்து சக்தியாக விளங்குகின்றனர்.
