'சொல்ற காசு குடுத்தா சொந்த ஊர் போலாம்' ... 'சட்டவிரோதமாக லாரிகளில் பயணம்' ... ஒரு நபருக்கு வசூலித்த தொகை இத்தனை ஆயிரமா?
முகப்பு > செய்திகள் > இந்தியாகூலி தொழிலாளர்களை காய்கறி ஏற்றி செல்லும் லாரிகளில் மறைத்து வைத்து சொந்த மாநிலங்களுக்கு கொண்டு செல்லும் தகவல் டெல்லி போலீசார் சோதனையில் தெரிய வந்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிமாநிலங்களில் வேலை செய்து வரும் தினசரி கூலி தொழிலாளர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். பேருந்து மற்றும் ரெயில் வசதி ஒன்றும் இல்லாத காரணத்தால் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல நடைப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக டெல்லியில் பணிபுரிந்து வந்த உத்தரபிரதேசம் மற்றும் பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரம் நடந்து வருகின்றனர். இந்நிலையில் இதனைப் பயன்படுத்தி டெல்லியிலிருந்து வேறு மாநிலங்களுக்கு காய்கறி பொருட்களை ஏற்றி செல்லும் லாரி ஓட்டுனர்கள் நடைப்பயணம் மேற்கொண்டு வரும் தொழிலாளர்களை வண்டிகளில் மறைத்து வைத்து மற்ற மாநிலங்களில் கொண்டு சேர்ப்பதாக டெல்லி போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து டெல்லி போலீசார் கூறுகையில், 'காய்கறி ஏற்றி செல்லும் இரண்டு லாரிகளில் சோதனை நடத்திய போது குழந்தைகள் உட்பட சுமார் 70 பேர் சட்டவிரோதமாக லாரிகளில் மறைத்து வைத்து கொண்டு செல்வது தெரிய வந்துள்ளது. இதற்காக ஒரு நபருக்கு சுமார் 5,000 முதல் 10,000 வரை லாரி ஓட்டுனர்கள் வசூல் செய்துள்ளனர். காய்கறி ஏற்றி செல்லும் வாகனங்கள் செல்ல அனுமதியுள்ளதால் இந்த சட்டவிரோதமான செயலில் ஓட்டுனர்கள் ஈடுபட்டுள்ளனர்' என தெரிவித்துள்ளனர்.