'போலீஸ் டூட்டி முடிஞ்ச உடனே டீச்சர்...' 'இன்டர்நெட் இல்லாத ஏழை குழந்தைகளுக்காக...' சாலையோர பள்ளி தொடங்கிய கான்ஸ்டபிள்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇணைய வசதி இல்லாத குழந்தைகளுக்கு சாலை ஓரத்தில் வகுப்பு எடுக்கும் உத்தராகண்ட் காவலர் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறார்.

தற்போதைய கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில், பள்ளிகள் கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் வரும் கல்வியாண்டின் பாடத்திட்டங்கள் பாதிக்கப்படும் நிலையில் உள்ளன. ஒரு சில நிறுவனங்களும், அரசு பள்ளிகளும் இணையத்தளம் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுத்து வந்தாலும், ஸ்மார்ட் போன் வசதியே இல்லாத சூழலில் வாழ்க்கை நடத்துகின்றனர் ஒரு சில ஏழை, எளிய மக்கள்.
இம்மாதிரி தங்களின் கல்வியை பெற இயலாத ஏழைக் குடும்பத்தை சார்ந்த அக்கா, தம்பிக்கு சாலையோரத்தில் தற்காலிகமாகப் பள்ளி அமைத்து பாடம் எடுத்து வருகிறார் காவலர் ஒருவர்.
உத்தராகண்டில் காவலராக பணிபுரியும் இவர், கொரோனா ஊரடங்கு காலத்தில் 12 மணி நேர பணி முடித்த பின், சாலை ஓரத்தில் இரு குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்து அனைவரையும் மனம் நெகிழ செய்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது ட்விட்டர் பக்கத்தில் காவலரின் புகைப்படத்தை பகிர்ந்து அவருக்கு தனது வாழ்த்தையும், நன்றியையும் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவிவரும் இந்த இக்கட்டான காலகட்டத்தில் தங்களது சிறப்பான பணிகளை செய்துவருகிறது காவல்துறை. இதன் இடையிலேயும் காவலர் ஒருவர் உத்தராகண்ட் அருகே ருத்ராபூரின் சாலையோரத்தில் அக்கா, தம்பி இருவருக்கு பாடம் கற்பித்து வருகிறார்.
இந்த ஏழை குழந்தைகளின் கல்வி கற்கும் ஆர்வத்தை பார்த்து போலீஸ் கான்ஸ்டபிள் அவர்களுக்காக சாலையோரத்தில் ஒரு பள்ளியைத் தொடங்கியுள்ளார். '12 மணி நேரம் பணியாற்றிய பிறகும் சாலையோரத்தில் அமர்ந்து கற்பிக்கும் அந்தக் காவலருக்கு எனது வாழ்த்துகள்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மாணவர்கள் கொரோனா வைரஸ் விழிப்புணர்வோடு முகமூடி அணிந்து தங்களது கல்வியை கற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
