‘டிராஃபிக் போலீஸாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில்’.. ‘ஐடி ஊழியருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்’..
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Saranya | Sep 10, 2019 04:04 PM
உத்தரப்பிரதேசத்தில் போக்குவரத்து போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது ஐடி ஊழியர் ஒருவர் நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த ஐடி ஊழியரான கௌரவ் ஷர்மா (35) என்பவர் வயதான தனது பெற்றோருடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு காரில் சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது காசியாபாத் அருகே சோதனைக்காக அவருடைய காரை போக்குவரத்து போலீஸார் நிறுத்தியுள்ளனர்.
சோதனை என்ற பெயரில் போலீஸார் கடுமையாக நடந்துகொண்டதால் கௌரவ் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. வாக்குவாதத்தின்போது நீரிழிவு நோயாளியான அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள கௌரவின் தந்தை, “போலீஸார் கடுமையாக நடந்துகொள்ளும் அளவுக்கு நாங்கள் எந்த விதிமுறையையும் மீறவில்லை, காரில் 2 முதியவர்கள் இருக்கிறார்கள் என கௌரவ் எவ்வளவு கூறியும் போலீஸார் அதைக் கேட்கவில்லை. போலீஸாரின் கடுமையான நடவடிக்கையால்தான் நெஞ்சு வலி ஏற்பட்டு கௌரவ் உயிரிழந்துள்ளார்” எனக் கூறியுள்ளார். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என நொய்டா போலீஸார் தெரிவித்துள்ளனர்.