'நடிக்காத.. எழுந்து நில்லு'.. 'மாற்றுத்திறனாளிய இப்படியா நடத்துவீங்க?'.. பெண் பாதுகாப்பு அதிகாரியின் செயலுக்கு.. இளம் பெண் கண்டனம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Siva Sankar | Sep 10, 2019 09:54 AM
டெல்லியில் உள்ள இந்திராகாந்தி விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனைக்காக வந்த மாற்றுத்திறனாளி பெண்ணை, மத்திய தொழில் பாதுகாப்புப் படைப் பிரிவு பெண் போலீஸார் ஒருவர் கடுமையாக மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக கூறப்படும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் ஏறி மும்பை செல்வதற்காக வந்த மாற்றுத்திறனாளி பெண் ஒருவர், டெல்லி விமான நிலையத்தில் கேட்டுக்கொண்டவாறே, அவருக்கு வீல் சேரும் பாதுகாப்பு அதிகாரி ஒருவரையும் தந்து உதவினர். ஆனால் அங்கிருந்து பாதுகாப்பு சோதனைக்காக சென்றபோதுதான் இந்த சங்கடம் ஏற்பட்டதாக அப்பெண் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி தனது சமூக வலைப்பக்கத்தில் எழுதியிருக்கும் விராலி மோடி என்கிற அந்த மாற்றுத்திறனாளி பெண், 13 வருடங்களுக்கு முன் நிகழ்ந்த விபத்தால் தனக்கு இந்த நிலை ஏற்பட்டதாகவும், தான் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், பாதுகாப்பு சோதனையில் ஈடுபட்ட அந்த பெண் அதிகாரி, கட்டாயப்படுத்தியதாகவும், தன்னை எழுந்து நிற்கச் சொல்லி வற்புறுத்தியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் அந்த பெண் பாதுகாப்பு சோதனை அதிகாரி, விராலி மோடி தேவையே இல்லாமல் நடிப்பதாகவும், ஆனால் நன்றாக நடிப்பதாகவும் சக காவலர்களிடம் கூறியதாகவும், விராலி மோடியைப் பார்த்து‘நீ எழுந்து நிற்காமல் எப்படி என்னால் சோதனை செய்ய முடியும், உன்னால் எழுந்து நிற்க முடியும் எழு’ என்று அதட்டியதாகவும் அதன் பின்னர் ஒரு மூத்த அதிகாரி வந்து தன்னை சோதித்து உண்மையில் மாற்றுத்திறனாளிதான் என்று அறிந்து, விடுவித்ததாகவும் பதிவு செய்துள்ளார்.
இதையெல்லாம் தனது வலைப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ள மாற்றுத்திறனாளி விராலி மோடி, ‘மாற்றுத்திறனாளிகளிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று கூடவா காவலர்களுக்கு சொல்லித்தரப்படவில்லை? இதுபோன்ற சம்பவங்கள் வெட்கப்படவைக்கின்றன’ என்று குறிப்பிட்டு, தனது பாஸ்பார்ட், விமான டிக்கெட்டுகள் உள்ளிட்டவற்றையும் இந்த பதிவுடன் இணைத்து இணையத்தில் பதிவேற்றியுள்ளார்.