‘என்ஜீனியர்’ மணமகன் அனுப்பிய 'வாட்ஸ் ஆப்'... உங்க பொண்ணு வாழ்க்கைய... அதிர்ச்சியான ‘மணப்பெண்’ வீட்டார்... கடைசியில் நடந்த சோகம்

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Dec 13, 2019 03:58 PM

திருமணத்தில் விருப்பம் இல்லாத சாஃப்ட்வேர் என்ஜீனியர் ஒருவர், தனக்கு அந்த நோய் இருப்பதாக பெண் வீட்டாரிடம் கூறி, நாடகமாடியதால் கைதுசெய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

techie groom arrested over aids drama to stop wedding

கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள கே.ஆர். புரம், பி.இ.எம்.எல். (BEML) லே அவுட்டைச் சேர்ந்தவர் வி.என். கிரண் குமார் (30). இவர் அங்குள்ள மன்யாட்டா (Manyata Tech Park) என்ற ஐடி நிறுவனத்தில் சாஃப்ட்வேர் என்ஜீனியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், விஜய நகர் பட்டேகராபால்யா மெயின் ரோட்டில் வசிக்கும் 29 வயதான பெண் ஒருவருக்கும், வீட்டு பெரியவர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களது திருமணம் கடந்த 1-ம் தேதி  அன்று உல்லாலா மெயின் ரோட்டில் உள்ள சிக்கம்மா ராமையா கல்யாண மண்டபத்தில் நடைபெற உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து தடபுடலாக ஏற்பாடுகள் நடைப்பெற்றன. பெண் வீட்டார் சார்பில் திருமண அழைப்பிதழ்களும் அச்சிடப்பட்டு உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு கொடுத்து வந்தனர். திருமண மண்டபத்திற்கு பெண் வீட்டாரே அட்வான்ஸ் தொகையும் கொடுத்துள்ளனர். சுமார் 15.70 லட்சம் ரூபாய் அளவிற்கு செலவு செய்யப்பட்ட நிலையில், வேலை விஷயமாக இடையில் மாப்பிள்ளை கிரண் குமார், அமெரிக்கா சென்றிருந்தார். அங்கிருந்து திருமணம் நெருங்கிய வேளையில், தனது தம்பியான சந்திர சேகருக்கு வாட்ஸ் ஆப் மூலம் மெசேஜ் ஒன்று அனுப்பி, இதனை பெண் வீட்டாரிடம் தெரிவித்து விடும்படி கூறியுள்ளார்.

அதில்,  தனக்கு ‘எய்ட்ஸ்’ என்ற கொடிய நோய் இருப்பதாகவும், அதனால் தனக்கு திருமணம் வேண்டாம் என்றும், ஒரு பெண்ணின் வாழ்க்கையை தான் கெடுக்க விரும்பவில்லை என்று அனுப்பியிருந்தார். இதனை நம்பி அவரது தம்பி, பெண் வீட்டாரிடம் இதுகுறித்து தெரிவித்துவிட்டு, உடனடியாக திருமணத்தை நிறுத்துமாறு கூறியுள்ளார். இதைக் கேட்டு மணப் பெண் உள்பட பெண் வீட்டார் அதிர்ந்து போயினர். அதன்பின்னர் கிரண்குமாரின் வீட்டுக்கு சென்ற பெண் குடும்பத்தார், அங்கே அழுதுகொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த கிரண்குமாரின் குடும்பத்தை தேற்றினர்.

மேலும் திருமணத்தை தள்ளி வைத்த பெண் வீட்டார், மாப்பிள்ளை வந்ததும் மறுபடியும் ஒரு முறை பரிசோதனை செய்து பார்க்கலாம் என்று ஆலோசனைக் கூறியுள்ளனர். அதன்படி, அமெரிக்காவில் இருந்து வந்த கிரண் குமாரை, பழைய விமானநிலையம் ரோட்டில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று எச்.ஐ.வி. பரிசோதனை செய்ததில், அவருக்கு அப்படி ஒரு நோய் இல்லை என்று தெரியவந்தது. தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாததால், அப்படி ஒரு பொய் சொன்னதாக தனது பெற்றோரிடம் கிரண் குமார் கூறியுள்ளார். இந்நிலையில் பெண் வீட்டார் பரிசோதனை குறித்து கேட்டனர்.

அப்போது மகனுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்று நடந்தவற்றை கூறியுள்ளனர். இதனால் பெண் வீட்டார் உறைந்து போயினர். அதன்பிறகு கிரண் குமார் வீட்டில் இருந்து பேசுவதையும் நிறுத்தியுள்ளனர். திருமணத்திற்கு 4 நாட்களுக்கு முன்னர் இந்த விஷயம் தெரியவந்ததை அடுத்து, கிட்டதட்ட பெண் வீட்டார் 15.70 லட்சம் ரூபாய் செலவு செய்ததால், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில், (IPC 420) மற்றும் (IPC 417) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், என்ஜீனியர் கிரண் குமார் உள்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கைதுசெய்யப்பட்ட கிரண் குமார் தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

Tags : #TECHIE #ENGINEER #BANGALORE #GROOM #BRIDE