"போன படத்துலயே துல்கருக்கு பிரபாகரன் பத்தி தெரிஞ்சிருக்கணும்.. தெரியாம காட்சி வெச்சிட்டோம்னு சொல்றத ஏற்க முடியாது" - சீமான் காட்டம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Apr 27, 2020 07:42 PM

துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்துள்ள "வரனே அவஷ்யமுண்ட்" மலையாளத் திரைப்படத்தில் விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் பெயரில் சித்தரிக்கப்பட்ட காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி பேசியுள்ளார்.

seeman criticizes says Malayalam movie used prabhakaran name wrongly

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழீழத் தேசியத் தலைவரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தலைவருமான பிரபாகரனின் பெயரை  அவமதிக்கும் வகையில் தவறாக சித்தரித்து காட்சி அமைக்கப்பட்டு இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது” என்று தெரிவித்துள்ளார்.  மேலும் அந்த அறிக்கையில், “முன்னதாக துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த முந்தைய படமான ‘காம்ரேட் இன் அமெரிக்கா’ திரைப்படத்திலும் பிரபாகரனின் புகைப்படம் ஒரு காட்சியில் பயன்படுத்தப் பட்டிருப்பதால் துல்கருக்கு, பிரபாகரன் பற்றி ஏற்கனவே கட்டாயம் தெரிந்திருக்க கூடும்” என்றும்  “ஆகையால், தெரியாமல் வைத்து விட்டோம் என்றோ கேரளாவில் பெரும்பாலோனோர் வைத்திருக்கும் பொது பெயர்தான் இது என்றோ துல்கர் சல்மான் கூறக்கூடிய காரணங்கள் ஏற்புடையது அல்ல” என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல், “படக்குழுவினருக்கு பிரபாகரனின் பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளதில் எவ்வித உள்நோக்கமும் இல்லை எனில் அந்தப் பெயர் இடம்பெறும் காட்சியை மட்டும் தனியாக விளம்பரப்படுத்த வேண்டிய அவசியம் ஏன்?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். எனினும் இது பற்றிப் பேசிய நடிகர் துல்கர் சல்மான், “பிரபாகரன் பெயர் பயன்படுத்தப்பட்டதில், எந்த உள்நோக்கமும் இல்லை” என்று தெரிவித்ததோடு, தமிழர்களின் மனம் புண்பட்டிருந்தால் அதற்காக மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்துள்ளார்.