'நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்துக்கு'... 'முதல்வர் அதிரடி பதில்'... ‘சீமான் கடும் விமர்சனம்’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Nov 21, 2019 08:50 PM
நடிகர் ரஜினிகாந்த் கூறிய அரசியல் கருத்துக்கு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சீமான் பதிலளித்துள்ளனர்.
‘வரும் 2021 -ம் ஆண்டு தமிழக மக்கள் அதிசயத்தையும், அற்புதத்தையும் நூற்றுக்கு நூறு சதவிகிதம் நிச்சயம் நிகழ்த்துவார்கள்’ என்று நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் இன்று சென்னை விமானநிலையத்தில் கூறியிருந்தார். 2021-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலையொட்டி அவர் இவ்வாறு கருத்து கூறியிருந்தார்.
இது தொடர்பாக தூத்துக்குடி விமான நிலையத்தில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ‘ரஜினி சொன்னது என்ன அதிசயம் என தெரியவில்லை. அவர் எந்த அடிப்படையில் அதிசயம் என கூறினார் என தெரியவில்லை. 2021-ல் அதிமுக ஆட்சி தான் மலரும் என்ற அதிசயத்தை அவர் சொல்லியிருக்கலாம். ரஜினி இன்னும் கட்சி ஆரம்பிக்கவில்லை. முதலில் அவர் கட்சி ஆரம்பிக்கட்டும். அதன் பிறகு, அவர் குறித்து கருத்து தெரிவிக்கிறேன்’ என்றார்.
இந்நிலையில், ரஜினியின் இந்தக் கருத்துக்கு தனது ட்விட்டர் பக்கத்தில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
ஆம்! அதிசயம் நிகழும்.
'தான் என்ன பேசினாலும் அது செய்தியாகும்' என்கிற நினைப்பிலும்,மிதப்பிலும் செய்தி அரசியல் செய்து,அதீத ஊடகவெளிச்சம் மூலம் ஊதிப் பெரிதாக்கப்பட்ட ரஜினிகாந்த் எனும் வெற்றுப்பிம்பம் இனமானத்தமிழர்களால் தூள் தூளாகும் அதிசயம் அற்புதம் 2021யில் நடக்கும், நடந்தே தீரும்.
— சீமான் (@SeemanOfficial) November 21, 2019